சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக "செஞ்சுரி" அடித்த அஸ்வின்.. 100வது போட்டியில் ஆடுகிறார்!
Mar 30, 2025,07:43 PM IST
குவஹாத்தி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆர். அஸ்வின், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது 100வது போட்டியில் களம் கண்டுள்ளார்.
கடந்த 18 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட பல ஐபிஎல் அணிகளில் விளையாடியுள்ளார் அஸ்வின். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் கூட முக்கியமான வீரராக வலம் வந்தவர்.
2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார் அஸ்வின். சிஎஸ்கேவுக்காக 6 வருடம் அவர் விளையாடினார். இதில் 2010 மற்றும் 2011 தொடர்களில் சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னர் 2 ஆண்டுகள் தடை வந்த பிறகு, 2016ம் ஆண்டு அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறினார்.
2017 தொடரில் அஸ்வின் விளையாடவில்லை. 2018ல் மீண்டும் அவர் வந்தபோது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறினார். 2020ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடம் பெயர்ந்த அஸ்வின், 2 சீசன்கள் அவர்களுக்காக ஆடினார். அதைத் தொடர்ந்து 2022ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றார். தற்போதைய தொடரில் அவர் சென்னை அணிக்கு மீண்டும் வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணிக்குத் திரும்பியுள்ள அஸ்வின் இன்று தனது 100வது போட்டியில் விளையாடுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக அளவிலான போட்டிகளில் விளையாடிய பெருமை எம்.எஸ். தோனியிடம் உள்ளது. அவர் 223 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, வேயன் பிராவோ ஆகியோர் உள்ளனர். 100 போட்டிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அஸ்வின்.
தற்போதைய சீசனில் ரூ. 9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் அஸ்வின். முதல் இரு போட்டிகளிலும் அவரது ஆட்டம் திருப்திகரமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.