17 வருடங்களுக்குப்பின்.. சேப்பாக்கத்தில் வென்ற பெங்களூர்.. ஏமாற்றிய சிஎஸ்கே.. தோனியின் ஆறுதல் அதிரடி

Su.tha Arivalagan
Mar 28, 2025,07:19 PM IST

சென்னை: 17 வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றைய சொதப்பலான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக சோர்வடைய வைத்து விட்டது. அதேசமயம், கடைசி நேரத்தில் தல தோனி காட்டிய சில வான  வேடிக்கைகள் ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல் படுத்தியது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பீல்டிங், பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலுமே ஏமாற்றியது. முதல் போட்டியில் மும்பையை ஈஸியாக ஹேன்டில் செய்த சென்னை அணி இன்று அனைத்து வகையிலும் சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாந்து போய் விட்டனர். 196 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய ஆரம்பித்த சென்னைக்கு தொடக்கத்திலிருந்தே சரிவுதான்.




அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து வந்தன. ராகுல் திரிபாதி, 5, ருத்துராஜ் கெய்க்வாட் டக் அவுட், தீபக் ஹூடா 4 ஆகியோர் அடுத்தடுத்து சரிய, மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா சரியான பார்ட்னர் கிடைக்காமல் தவித்தார். இருப்பினும் சமாளித்து ஆடிய அவர் 31 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தார்.


ஷிவம் துபே நம்பிக்கை காட்டினார். ஆனால் அவரும் துரதிர்ஷ்டவசமாக வெளியேற, ரசிகர்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. ஜடேஜாவும், அஸ்வினும் நிதானமாக ஆடினர். ஜடேஜா 25, அஸ்வின் 11 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் களம் இறங்கிய தோனி வான வேடிக்கை காட்டி ரசிகர்களை ஆறுதல் படுத்தினார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய தோனியைப் பார்க்க முடிந்ததால் ரசிகர்கள் வேதனையை  மறந்து ஹேப்பியானார்கள். ஆட்டமிழக்காமல் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது.





2008ம் ஆண்டு கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையைத் தோற்கடித்திருந்தது பெங்களூர் அணி. அதன் பிறகு இங்கு அதற்கு வெற்றி கிடைத்ததில்லை. அந்த வரலாற்றை இன்று மாற்றிய பெங்களூரு அணி 17 வருடத்திற்குப் பிறகு சென்னையை சேப்பாக்கத்தில் வீழ்த்தியுள்ளது.


முன்னதாக பெங்களூரு அணி சிறப்பாக பேட் செய்து 196 ரன்களைக்  குவித்தது. தொடக்கத்தில் பிலிப் சால்ட் பவர் பிளே ஓவர்களில் அதிரிபுதிரியாக ஆடி ரன் குவிப்பைத் தொடங்கி வைத்தார். மறு முனையில் விராட் கோலி நிதானம் காட்டினார். அதேசமயம் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரை அட்டகாசமான ஸ்டம்பிங் மூலம் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் ஸ்டன்னிங் தோனி. தொடர்ந்து தேவ்தத் படிக்கல் வந்து அதிரடியைத் தொடர்ந்தார்.  14 பந்துகளில் 27 ரன்களைக் குவித்து அவர் ஆட்டமிழக்க மறுமுனையில் கோலி தொடர்ந்து நிதானமாக ஆடி வந்தார்.



கேப்டன் ரஜத் படீதார் வந்துதான் ரன் குவிப்பை மேலும் அதிகரித்தார். அவர் அபாரமாக ஆடி 51 ரன்களைக் குவித்து கேப்டனுக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தினார். மறுபக்கம் விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்களை  எடுத்து ஆட்டமிழந்தார்.  கடைசி வரிசையில் டிம் டேவிட் வெளுத்து வாங்கி விட்டார். ஜஸ்ட் 8 பந்துகளைச் சந்தித்த அவர் 22 ரன்களைக் குவித்து ஆர்சிபி அணி 190 ரன்களைத் தாண்ட உதவினார். 200 ரன்களை தாண்டி விடுமோ பெங்களூரு என்று சென்னை ரசிகர்கள் அஞ்சிய நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களோடு நின்று விட்டது. 


சென்னை அணி தரப்பில் வழக்கம் போல நூர் அகமது சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். மதீஷா பதீரனா 2 விக்கெட் எடுத்தார். ஆனால் முக்கிய விக்கெட்களை முன்கூட்டியே எடுக்கத் தவறியதாலும், சில தவறான பீல்டிங்காலும் சென்னை அணியால், பெங்களூரு ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் போய் விட்டது. இன்றைய பீல்டிங் பெரும் ஏமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.