பாளையத்தம்மன் படம் போல.. உண்டியலில் விழுந்த ஐபோன்.. ரூ. 10,000க்கு ஏலத்தில் எடுத்த உரிமையாளர்.!

Manjula Devi
Jan 09, 2025,07:19 PM IST

சென்னை: சென்னை அருகே திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தனது ஐ- போனை ரூபாய் 10 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளார் ஐ-போனின் உரிமையாளர் தினேஷ்.


சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நிர்வாகப் பணியாளராக பணிபுரிந்து வரும் இவர் சமீபத்தில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த முயன்று போது, தவறுதலாக அவருடைய ஐபோனும் கூடவே விழுந்துள்ளது. இந்த ஐபோனின்  மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும்.


அவர் உடனடியாக இந்து  அறநிலையத்  துறைக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் தனது விலை உயர்ந்த செல்போனை மீட்டு தரும்படி கூறியிருந்தார். அதற்கு கோவில் நிர்வாகம் பாளையத்தம்மன் படத்தைப் போலவே, கோவில் உண்டியலில் விழுந்த பொருளோ பணமோ கடவுளுக்கு தான் சொந்தம் என கூறினார்கள். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 


தொடர்ந்து காணிக்கைகளை எண்ணுவதற்காக  உண்டியல்  திறக்கப்பட்டது. அப்போது செல்போனும் எடுக்கப்பட்டு அறநிலை துறை விதிகளின்படி செல்போன் ஏலத்தில் விடப்பட்டது.  ஏலத்தில் கலந்து கொண்ட தினேஷ், தனது போனை ரூ. 10,000க்கு ஏலத்தில் எடுத்து அதைத் திரும்பப் பெற்றார்.


திருப்போரூர் முருகன் கோவிலுக்குப் போயிருக்கீங்களா?




காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்போரூர் முருகன் கோவில் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் கந்தசாமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். அதே போல் வள்ளி தெய்வானை தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளனர். சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் நடைபெறும் சஷ்டி விழா, தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாகம் போன்றவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் இத்தல முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் நினைத்தது நிறைவேறி விட்டால் பால்குடம், அலகு குத்துதல் போன்ற நேர்த்தி கடன்களை மக்கள் செலுத்துகின்றனர். இதனால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்  கூட்டம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


முருக பக்தரான அருணகிரிநாதர் இங்கு வந்து முருக பெருமானை தரிசித்து திருப்புகழை பாடியிருக்கிறார் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதேபோல் சிதம்பர சுவாமிகளும் இங்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றுள்ளார். பொதுவாக எல்லா கோயில்களிலும் கோபுரத்தை கடந்து சுவாமி சன்னதிக்கு எதிராகத்தான் கொடிமரம் அமைந்திருக்கும் ஆனால் திருப்போரூர் முருகன் கோவிலில் கோபுரத்திற்கு வெளியே அமைந்துள்ளது கொடிமரம்.


விக்ரம், வடிவேலு நடித்த கந்தசாமி படத்திலும் கூட திருப்போரூர் முருகன் கோவில் முக்கியமான பங்கு வகித்திருக்கும் என்பது நினைவிரு்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்