தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், கன்னியாகுமரியில்.. இன்று நல்ல மழை இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்
May 22, 2024,04:55 PM IST
சென்னை: சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதே போல தமிழகத்தின் உள்பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாதனை அளவில் மழை இருக்கும். குறிப்பாக தென் மாவட்டமான கன்னியாகுமரியில் மிகப்பெரிய மழை இருக்கும். அதே நேரத்தில் அமராவதி அணை முதல் ஆழியார் அணை வரையிலான மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும்.
இன்று முதல் நாளை காலை வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ஆகிய இடங்களில் இன்று பரவலாக கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஐந்து நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை கத்திவாக்கம் 30 மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் 20 மி.மீ மழையும், பொன்னேரியில் 19 மி மீ மழையும், மாதவரத்தில் 18 மி மீ மழையும் பதிவானது.