இன்று கவுண்ட்டவுன் ஸ்டார்ட்... நாளை விண்ணில் பாய்கிறது இன்சாட் 3 டிஎஸ்

Meenakshi
Feb 16, 2024,11:06 AM IST
சென்னை: வானிலை ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நாளை பிப்., 17ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று மதியம் தொடங்கப்பட உள்ளதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வுகளுக்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.  வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்த இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. 16 வது முறையாக ஜி எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.





இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் ஆறு சேனல் இமேஜர்கள் உட்பட 25 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை நுட்பமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை  துல்லியமாக வழங்கும்  என்று கூறப்படுகிறது.இந்த செயற்கைகோள் புயலின் நகர்வு, இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து தகவல் தர உள்ளது. 2,274 கிலோ எடை கொண்டுள்ளது.

புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து நாளை (17-ம் தேதி) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், விண்ணில் ஏவுவதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மதியம் 2.05 மணிக்கு தொடங்குகிறது. நாளை மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.