இந்தியாவில் அதிக அளவிலான விமானங்கள்.. யார்கிட்ட இருக்கு தெரியுமா?
- சகாயதேவி
டெல்லி: உலக அளவில் அதிக விமானங்களை யார் வச்சிருக்காங்கன்னு தெரியுமா.. அட அதை விடுங்க.. இந்தியாவில் எந்த விமான நிறுவனத்திடம் அதிக அளவிலான விமானங்கள் இருக்குன்னாவது தெரியுமா.. சரி வாங்க பார்க்கலாம்.
முன்பெல்லாம் விமானங்கள் மேலே போகும்போது கீழே கூட்டமாக ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்த தலைமுறை உண்டு. "வெள்ளைக்காரன் போறான்" என்றுதான் பலரும் உற்சாகமாக கத்திக் கூச்சலவிடுவார்கள். விமானம் என்றால் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒருகாலத்தில் ஆச்சரியம்தான் தலை தூக்கும். அதிகபட்ச சொகுசு வாகனம் அவர்களைப் பொறுத்தவரை "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக ஏசி பஸ்தான்". ரயில் எல்லாம் கூட ஒரு காலத்தில் அதி சொகுசு வாகனமாக இருந்தது.
இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. "போன வாரம் அமெரிக்காவுக்குப் போயிருந்தேன்.. அடுத்த வாரம் கொழும்பு வரை போய்ட்டு வரணும்.. வந்துட்டு அடுத்த 2 வாரத்துல சிங்கப்பூர்ல ஒரு கல்யாணம் இருக்கு அட்டெண்ட் பண்ணனும்".. என்று சொல்வோர் இன்று அதிகமாகி விட்டனர். அந்த அளவுக்கு விமான பயணம் எளிதாகி விட்டது.
சரி வாங்க நம்ம மேட்டருக்குப் போவோம். இந்திய அளவில் எந்த விமான நிறுவனத்திடம் அதிக அளவிலான விமானங்கள் இருக்கிறது என்ற பட்டியலை World of Statistics அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த.. ஒரு நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.
இதுதான் அந்த லிஸ்ட்:
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் - 5,483 விமானங்கள்
டெல்டா ஏர்லைன்ஸ் - 4,629
யுனைடைட் ஏர்லைன்ஸ் – 4,213
சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் - 4,080
ரியான் ஏர் - 3,098
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் - 2,144
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் - 2,052
இண்டிகோ - 1,853
டர்கிஷ் ஏர்லைன்ஸ் - 1,819
பீஜிங் ஏர்லைன்ஸ் - 1,586
இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 500 விமானங்களை அது வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு பக்கம் ஏர் இந்தியாவும் அதிக அளவிலான விமானங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவும் அதிக அளவில் விமானங்களை வாங்குகிறது.
விமானத்தால் நேரம் மிச்சமாகும் என்பதால் நம்மவர்களும் விமான பயணத்தின் பக்கம் அதிகம் திரும்பி வருகிறார்கள். விமான சேவையில் இண்டிகோ மற்ற நிறுவனங்களை விட கட்டணம் குறைவாக வசூலிப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
"நாம ஜெயிச்சிட்டோ மாறா" என்று கண்டிப்பாக இண்டிகோ நிறுவனம் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.