அரிசிக் கடைக்குப் படையெடுத்த இந்தியர்கள்.. அமெரிக்காவில் திடீர்  பரபரப்பு!

Su.tha Arivalagan
Jul 22, 2023,02:30 PM IST
நியூயார்க்: அமெரிக்காவில் அரிசி விற்பனை செய்யப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க இந்தியர்கள் படையெடுத்தபடி உள்ளனர். இதனால் அங்கு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

உலக அளவில்  அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா. உலக அரிசித் தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் மேலாக நாம்தான் பூர்த்தி செய்கிறோம். இந்த நிலையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. வெள்ளம், மழை உள்ளிட்ட காரணத்தால் உள்நாட்டில் அரிசி உற்பத்தி குறைந்திருப்பதால் விலைஉயர்வைத் தவிர்க்கும் வகையில் இந்த தடையை மத்திய அரசு அறிவித்துள்ளது.  



இந்த அரிசி தடையால் பல நாடுகளில் அரிசி விலை உயரும் அல்லது பற்றாக்குறை வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இது தற்போது அமெரிக்காவில் வேறு ரூபத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அங்கு அரிசிக்கு பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம் இந்தியர்களிடையே எழுந்துள்ளது. Panic Buying காரணமாக அரிசிக் கடைகளுக்கு இந்தியர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கிடைக்கிற அரிசியை மூட்டை மூட்டையாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்குள்ள வணிக வளாகங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இந்தியாவிலிருந்து இனி அரிசி வருமா என்று தெரியவில்லை. எனவே முடிந்தவரை சில அரிசி மூட்டைகளை வாங்கி ஸ்டாக் வச்சுக்கங்க என்று இந்தியர்கள் வாட்ஸ் ஆப் குரூப்களில் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால்தான் பீதி அதிகமாகி மக்கள் கடைகளுக்குப் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



அங்குள்ள பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.