ஹய்யா ஜாலி.. 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.. நம்ம பாஸ்போர்ட் ரேஞ்சே வேறப்பா!

Manjula Devi
Jan 13, 2024,05:52 PM IST

டெல்லி: ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, இந்திய பாஸ்போர்ட் உலகத் தரவரிசையில் 80வது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அது என்ன.. "ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு" அப்படின்னு கேட்கிறீர்களா.. வாங்க சொல்கிறேன்.. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது நாடுகள் மற்றும் அவற்றின் பாஸ்போர்ட்டுகளுக்கான உலகளாவிய தரவரிசை அமைப்பாகும். உலக அளவில் நாடுகளின் முக்கியத்துவத்துக்கேற்ப அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது இந்த ஹென்லி அமைப்பு. அதன்படி,  உலக அளவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் கூட்டாக முதலிடத்தில் உள்ளனவாம்.  உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் இந்த நாட்டுக்காரர்களுடையதுதான். இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே பயணிக்க முடியும்.  அதற்கு நேர் மாறாக ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் உள்ளது. இந்த நாட்டுக்காரர்களால் 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.


இந்த தரவரிசையில் பட்டியலில் இந்தியா கடந்தாண்டு 87 வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவின் செல்வாக்கு உலகளவில் அதிகரித்து வருகிறது. இதனால்  இந்த வருடம் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி இந்திய பாஸ்போர்ட்டிற்கு உலக அளவில் 80வது இடம் கிடைத்துள்ளது.




இதன் காரணமாக தற்போது, இந்தியர்கள் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று தெரியுமா.. அதையும் தெரிஞ்சுக்கங்க. இதுதான் அந்தப் பட்டியல்:


அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், ஜிபூட்டி, டொமினிகா,  எல்சால்வடார், எத்தியோப்பியா, பிஜி, காபோன், கிரெனடா, கினியா பிசாவ், ஹைட்டி, இந்தோனேசியா, ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபாட்டி, லாவோஸ், மக்காவ், மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மார்ஷல் தீவுகள், மொரிட்டானியா, மொரீசியஸ், மைக்ரோனேசியா, மாண்ட்செராட், மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியு ஓமன், பலாவ் தீவுகள், கத்தார், துவாலு, வனவாடு, ருவாண்டா, சமோவா,செனகல், சீஷெல்ஸ், சியாராலியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட்கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட், தான்சானியா, தாய்லாந்து, கிழக்கு திமோர், டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா  ஜிம்பாவே போன்ற 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்யலாம்.


பிறகென்ன பாஸ்.. வருஷத்துக்கு ஒரு நாடுன்னு கணக்கு வச்சாலும்.. 62 நாடுகள் இருக்கு.. வாழ்க்கையை ஜாலியா ஓட்டிரலாம்.. என்ன கிளம்பலாமா?.. "ஆன் தி வே"யில் இந்தப் பட்டியலில் அமெரிக்காவும் சேரும்போது.. அந்தப் பக்கமாவும் வண்டியை திருப்பிக்கலாம்... என்ன நாங்க சொல்றது!