சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இனி சர்வதேச போட்டிகளில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அஸ்வின் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். இந்த அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.
டெஸ்ட் மட்டுமல்லாமல், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் அசத்தலான பல சாதனைகளைப் படைத்தவர் அஸ்வின். சர்வதேச அளவில் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வினுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தவர் அஸ்வின்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், அஸ்வின் திடீரென இப்படி ஒரு முடிவை ஏன் அறிவித்தார் என்ற கேள்வியும் ஆச்சரியமும் எழுந்துள்ளது. சிறந்த ஆப் ஸ்பின்னரான அஸ்வின் செய்த சாதனைகள் அசாதாரணமானது. மிகவும் புத்திசாலித்தனமான வீரரும் கூட. ஒவ்வொரு பந்தையும் வித்தியாசாக போடக் கூடிய திறமை படைத்தவரும் கூட.
திட்டமிட்டு அழகாக பந்து வீசக் கூடியவரான அஸ்வின் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளீதரன், இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் நடை போட்டு வந்த நிலையில் தற்போது திடீரென ஓய்வு பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று வகையான கிரிக்கெட்டில் அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அவருக்கு நிகரான பந்து வீச்சாளர் இனி வருவது கடினம். அஸ்வினின் ஓய்வு முடிவு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக வந்துள்ளது. பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் கூட அசத்தக் கூடியவர் அஸ்வின். அடிக்க ஆரம்பித்து விட்டால், அருமையான ரன் குவிப்பில் ஈடுபடக் கூடியவர் அஸ்வின். டெக்னிக்கலாகவும் சிறந்த வீரர் அஸ்வின்.
இந்தியாவுக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அசத்தியுள்ள அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் அசத்தியவர் அஸ்வின். இளம் வீரர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கம் தரக் கூடியவர் அஸ்வின். அவரது இடத்தை யார் வந்தாலும் ரீப்ளேஸ் செய்வது கடினம்தான்.
அஸ்வின் சாதனைகள்:
38 வயதாகும் அஸ்வின் மிகச் சிறந்த வலது கை ஆப் ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேன்.
2011ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடினார் அஸ்வின். கடைசியாக அவர் விளையாடிய டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்டர் டிராபி டெஸ்ட் போட்டி.
முதல் ஒரு நாள் போட்டியை 2010ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இலங்கைக்கு எதிராக ஆடினார். கடைசியாக அவர் ஆடிய ஒரு நாள் போட்டி 2023ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டி.
2010ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் டி20 போட்டியை ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடிய அஸ்வின், கடைசி டி20 போட்டியை 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக ஆடியிருந்தார்.
தமிழ்நாடு, திண்டுக்கல் டிராகன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், ஒர்சஸ்டர்ஷயர், நாட்டிங்காம்ஷயர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ், சுர்ரே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்
மொத்தம் விளையாடியது - 105
ரன்கள் - 3474
சதம் 6, அரை சதம் 14
அதிகபட்ச ஸ்கோர் - 124
விக்கெட்கள் - 536
ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் - 37
ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் - 8
சிறந்த பந்து வீச்சு - 7/59
ஒரு நாள் போட்டிகள்
மொத்தம் விளையாடியது - 116
ரன்கள் - 707
அரை சதம் - 1
அதிகபட்ச ஸ்கோர் - 65
விக்கெட்கள் - 156
சிறந்த பந்து வீச்சு - 4/25
டி 20 போட்டிகள்
மொத்தம் விளையாடியது - 65
ரன்கள் - 184
அதிகபட்ச ஸ்கோர் - 31
விக்கெட்கள் - 72
சிறந்த பந்து வீச்சு - 4/8
முதல் தர போட்டிகள்
மொத்தம் விளையாடியது - 156
ரன்கள் - 5221
சதம் 7, அரை சதம் 25
அதிகபட்ச ஸ்கோர் - 124
விக்கெட்கள் - 758
ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் - 55
ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் - 12
சிறந்த பந்து வீச்சு - 7/59
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்