Srivaikundam Station Master.. தீரமாக செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு.. ரயில்வே உயரிய விருது!

Manjula Devi
Dec 18, 2024,12:36 PM IST

தூத்துக்குடி: கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது செந்தூர் விரைவு ரயிலை உரிய நேரத்தில் நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த ஸ்ரீ வைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.


ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக கன மழை பெய்து சென்னை மாநகரத்தையே புரட்டிப்போடும். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட மழையின் பாதிப்புகள் குறைந்த பிறகு தென் தமிழகப் பகுதிகளில் டிசம்பர் 17ஆம் தேதி அதீத கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரே நாளில் பேய் மழை கொட்டி தீர்த்து 3 மாவட்டங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது. 


குறிப்பாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. நகரின் முக்கிய பகுதிகளான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம்,போன்ற பகுதிகளில் கடை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் பல்வேறு சாலைகளில் துண்டிக்கப்பட்டு ஊர் முழுவதும் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த நேரத்தில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்குச் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் வருவதற்கு முன்பே இடையில் நிறுத்தப்பட்டது. 




முன்னதாக ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் மழைநீர் முழுவதும் ஆக்கிரமித்து தண்டவாளங்கள் சேதமடைந்து இருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு தகவல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாதுர்யமாக ரயிலை நிறுத்தி ஒரு நாள் இரவு முழுவதும் பாதியிலேயே செந்தூர் எக்ஸ்பிரஸ் நின்றது. இதனால் ரயிலிருந்த குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள், பயணிகள் என அனைவரும் உணவு, குடிநீர், இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனை அறிந்த அருகில் இருந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து ரயிலில் இருந்த 800 பயணிகளுக்கும் உணவு சமைத்து கொடுத்து தங்களால் இயன்ற  உதவிகளை வழங்கினார்கள். இந்த இந்த மனிதாபிமானத்தை அனைவரும் பாராட்டினர்.  தக்க சமயத்தில் ரயிலிலை நிறுத்தி ரயிலில்  இருந்த 800 பயணிகளின் உயிரையும் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு தற்போது ரயில்வேயின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும்அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறை வழங்கும் இந்த விருதுக்காக இந்திய அளவில் 100 ஊழியர்கள் பரிசீலிக்கப்பட்டு தெற்கு ரயில்வே துறையை சார்ந்த ஆறு பணியாளர்கள் மற்றும் 2 ரயில்வே அதிகாரிகள் இந்த விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


டிசம்பர் 21-ம் தேதி 69ஆவது ரயில்வே விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இதில் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு அதி விஷிஸ்ட்  ரயில்வே சேவா புஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இவ்விருதினை வழங்கி கௌரவிக்க உள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்