ஒடும் விமானத்தில் அடுத்தடுத்து ஹார்ட் அட்டாக்.. 5 மணி நேரம் போராடி உயிரை மீட்ட டாக்டர்!

Su.tha Arivalagan
Jan 06, 2023,12:38 PM IST
பிர்மிங்காம்: இங்கிலாந்தில் ஓடும் விமானத்தில் பயணி ஒருவருக்கு அடுத்தடுத்து  மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் கடுமையாக போராடி காப்பாற்றியுள்ளார்.



அந்த டாக்டரின் பெயர் விஸ்வராஜ் வெமலா. பிர்மிங்காமில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் இந்தியாவுக்கு பயணத்தில் இருந்தபோது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் வெமலா அவருக்கு  சக பயணிகளின் உதவியோடு சிபிஆர் உள்ளிட்டவற்றை செய்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் அந்தப் பயணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இம்முறையும் வெமலா தன்னால் முடிந்ததைச் செய்து அந்த பயணியின் உயிரைக் காத்துள்ளார்.

கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்குள் அந்தப் பயணிக்கு 2 முறை மாரடைப்பு வந்து, கடுமையாக போராடி வெமலா அவரைக் காப்பாற்றியுள்ளார். மாரடைப்பு வந்த அந்த பயணிக்கு வயது 43 ஆகும். அந்த விமானத்தின் பயண நேரம் 10 மணி நேரமாகும். அதில் பாதி நேரம் அந்த விமானத்தில் ஒரு உயிர்ப் போராட்டம் நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவசர நிலை காரணமாக பெங்களூரு வர வேண்டிய அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு அந்த பயணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருமுறை மாரடைப்பு வந்தும் தன்னை போராடிக் காப்பாற்றிய டாக்டர் வெமலாவுக்கு அந்த நோயாளி நன்றி கூறிக் கொண்டார். எனது வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டேன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இத்தனைக்கும் விமானத்தில் பெரிய அளவில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. இருந்த சில மருந்துகளை மட்டும் வைத்து அந்த நோயாளியைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் வெமலா.

பெங்களூரில் வெமலாவின் தாயார் வசித்து வருகிறார். அவரை தன்னுடன் பிர்மிங்காம் அழைத்து வருவதற்காக இந்தியாவுக்குப் பயணித்தார் வெமலா. வரும் வழியில் இப்படி ஒரு அனுபவம் அவருக்குக் கிடைத்துள்ளது.