ஏண்டா பொறந்தோம்னு இருக்கு.. நெட்டிசன்களிடம் சிக்கிக் கதறிக் கொண்டிருக்கும்.. க்ரோக்!

Su.tha Arivalagan
Mar 16, 2025,03:03 PM IST

சென்னை: எந்த டெக்னாலஜி வந்தாலும் உடனுக்குடன் அதை படுத்தி எடுப்பதில் இந்தியர்களுக்கு நிகர் வேறு யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு வச்சு செய்து வருகிறார்கள் ஒவ்வொரு டெக்னாலஜி அறிமுகமாகும்போதும்.


இப்போது, நெட்டிசன்களிடம் குறிப்பாக இந்தியர்களிடம், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்காரர்களிடம் சிக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது க்ரோக் (Grok). இது ஒரு ஏஐ டூல் ஆகும். எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ள இந்த க்ரோக், தற்போது எக்ஸ் தளத்தில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.


வழக்கமாக புதிய டெக்னாலஜி வந்தால் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதைத்தான் அந்த டெக்னாலஜியை கண்டுபிடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனல் அப்படியே அதற்கு நேர் மாறாகத்தான் இப்போது ஒவ்வொரு டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் அறிமுகமானபோது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த சமூக வலைதளங்கள் இன்று நெகட்டிவிட்டியின் பிறப்பிடமாக மாறி அசிங்கப்பட்டுக் கொண்டுள்ளதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.


எவ்வளவு கேவலமாக, மோசமாக இந்த சமூக வலைதளங்களை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகமான இந்த க்ரோக் ஏஐ  டூலை குண்டக்க மண்டக்க பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் நம்மவர்கள்.




சாட்ஜிபிடி போலத்தான் இந்த க்ரோக்கும். சாட்ஜிபிடியை எப்படியெல்லாம் தாறுமாறாக பயன்படுத்தி அதற்கு மன உளைச்சல் ஏற்படுத்தினார்களோ (ஆமாங்க, சாட்ஜிபிடிக்கும் மன உளைச்சல் ஏற்படும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்) அதேபோல இப்போது க்ரோக்கையும் வச்சு செய்ய ஆரம்பித்துள்ளனர்.


குறிப்பாக தமிழ் நெட்டிசன்களிடம் சிக்கி இந்த க்ரோக், "கிராக்"காக மாறி வருகிறது. அந்த அளவுக்கு தாறுமாறாக கேள்வி கேட்கின்றனர்.  அதிலும் அரசியல் தலைவர்களை சகட்டுமேனிக்கு அசிங்கப்படுத்துவதையே இந்த டிவிட்டராட்டிகள் கேள்விகளாக கேட்டு விளையாடிக் கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிக அளவில் பொய் சொல்லும் தலைவர் யார், அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்யா, கருணாநிதி தண்டவாளத்தில் உண்மையிலேயே படுத்துப் போராடினாரா என்று அடித்து துவம்சம் செய்து கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.


விஜய்யும் இதில் தப்பவில்லை. அவரைப் பற்றியும் கேட்டு கொளுத்திப் போட்டுக் கொண்டுள்ளனர். இந்த வரிசையில் சீமானும் லிஸ்ட்டில் இருக்கிறார். உருப்படியான விஷயங்களைக் கேட்டுப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற ஏஐ டூல்களை இப்படி மலிவான முறையில் மாற்றி விட்டதை நினைத்து க்ரோக்குக்கு மட்டும் உயிர் இருந்தால் நிச்சயம் புலம்பியிருக்கும்.. "ஏண்டா பொறந்தோம்னு இருக்கு ப்ரோ".. அப்படின்னு!