சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலை மீட்டது இந்திய கடற்படை.. 15 இந்தியர்களும் பத்திரம்!

Su.tha Arivalagan
Jan 05, 2024,08:43 PM IST

டெல்லி: சோமாலியா அருகே கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய கடற்படை கமாண்டோக்கள் அதிரடியாக மீட்டுள்ளனர். கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உள்ளிட்ட 21 ஊழியர்களும் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய கடற்படை கமாண்டோக்கள் வந்ததைத் தொடர்ந்து கப்பலை பிடித்து வைத்திருந்த கடற்கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கப்பலுக்குள் யாரேனும் ஒளிந்துள்ளனரா என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர்.




இந்திய கடற்படையின் எலை பிரிவு கமாண்டோக்களான மார்கோஸ் படையினர்தான் இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எம்வி லைலா நார்போல்க் எனப்படும் சரக்குக் கப்பல் அரபிக் கடலில், சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து இந்திய கடற்படையின் கமாண்டோப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.


கப்பலை நெருங்கிய இந்திய கடற்படை கமாண்டோக்கள், கொள்ளையர்களை அங்கிருந்து போய் விடுமாறு எச்சரித்தனர். இந்திய கமாண்டோப் படையினரின் எச்சரிக்கையை முதலில் நிராகரித்த கடற்கொள்ளையர்கள் கப்பலிலேயே இருந்தனர். ஆனால் இந்திய கடற்படையினர் கப்பலை நோக்கி நெருங்கி வந்ததும், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். தற்போது கப்பல், இந்திய கடற்படையினர் வசம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சரக்குக் கப்பல் கடத்தப்பட்ட தகவலை இங்கிலாந்து கடல் வர்த்தக நடவடிக்கை குழு என்ற இங்கிலாந்து ராணுவத்தின் ஒரு பிரிவு, இந்திய கடற்படைக்குத் தெரிவித்து உதவி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சமீப காலமாக செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்களை கொள்ளையர்கள் தாக்கி வருகின்றனர். குறிப்பாக காஸா போருக்குப் பின்னர் இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. அமெரிக்க கப்பல்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து பல கப்பல்கள் செங்கடல் பகுதி வழியாக செல்லாமல் அரபிக் கடல் வழியாக திருப்பி விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போதைய சம்பவம் நடந்துள்ளது.