காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்.. இந்தியாவின் நெத்தியடி பதில்.. இங்கிலாந்துக்கு சிக்கல்!

Su.tha Arivalagan
Mar 23, 2023,09:47 AM IST
டெல்லி: இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தின் எதிரொலியாக, டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்த வெளிப்புற பாதுகாப்பை அகற்றி அதிரடி காட்டியுள்ளது இந்தியா. இதைத் தொடர்ந்து தற்போது லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இங்கிலாந்து அரசு பாதுகாப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் அவர்கள் போராட்டங்களில் குதித்து வருகிறார்கள். இந்திய தூதரகங்களை முற்றுகையிட்டு இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு காலிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தியபடி இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டத்தின் உச்சமாக அங்கு பால்கனியில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்க விட்டதால் பதட்டம் அதிகரித்தது.




இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. உடனடியாக இங்கிலாந்து துணைத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது இந்தியா. இந்த நிலையில் நேற்று அதிரடியாக டெல்லி சாணக்கியபுரியில் உள்ள இங்கிலாந்து தூதரகம், ராஜாஜி மார்க்கில் உள்ள இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸின் இல்லம் ஆகியவற்றுக்கு வெளியே போடப்பட்டிருந்த பாதுகாப்பை இந்தியா திரும்பப் பெற்றது. மேலும் பாதுகாப்பு தடுப்புகளும் அகற்றப்பட்டன.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டன் போராட்டத்தின்போது போலீஸார் மிக மிக தாதமாக வந்ததால்தான் போராட்டக்காரர்களின் அட்டகாசத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இங்கிலாந்து உளவுத்துறையின் தோல்வி இது என்பது இந்தியாவின் இன்னொரு குற்றச்சாட்டு.

பிரமாண்ட கொடி

இந்த நிலையில் காலிஸ்தான் போராட்டக்காரர்களுக்கு பதிலடி தரும் வகையில் லண்டன் இந்திய தூதரகத்தின் மேலே மிகப் பெரிய தேசியக் கொடி பொருத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமான அந்த தேசியக் கொடியை இந்திய தூதரக அதிகாரிகள் கட்டியுள்ளனர். 

ஆனால் நேற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் மீது மை கொட்டியும், கலர் பவுடரை வீசியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் நேற்று போலீஸார் மிகவும் சுதாரிப்புடன் இருந்து, தூதரகம் அருகே காலிஸ்தான் போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் பார்த்துக் கொண்டனர்.