பாரீஸ் ஒலிம்பிக்ஸ்.. இந்தியாவின் ஆரம்பமே அமர்க்களம்.. மகளிர், ஆடவர் வில்வித்தை அணிகள்..காலிறுதியில்!

Su.tha Arivalagan
Jul 25, 2024,09:47 PM IST

பாரீஸ்: பாரீஸில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் மகளிர் மற்றும் ஆடவர் வில்வித்தை அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.


நேரடியாக இரு அணிகளும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. அரை இறுதிக்குள் நுழைந்தால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகி விடும்.




தீரஜ் பொம்மதேவா, தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர்.  சுற்றுப் போட்டிகளில் ஆடவர் அணி 3வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது. மகளிர் அணி 4வது இடம் பெற்றது. தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்குப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  5 முதல் 12வது இடம் வரை பெறும் அணிகளுக்கு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும்.  இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகளைப் பொறுத்தவரை இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் பதக்கம் உறுதியாகி விடும். 


ஆடவர் அணியில் இடம் பெற்றுள்ள தீரஜுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.  




இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை அங்கிதாவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். மற்ற வீராங்கனைகளான தீபிகா குமாரி மற்றும்  பஜன் கெளர் ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 4வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.


இந்தியா காலிறுதியில் வென்றால், அரை இறுதிப் பொட்டியில் கொரியாவை சந்திக்க வேண்டியிருக்கும். கொரியா வலுவான அணி என்பதால் இந்த சுற்று சற்று சவால்தான்.