கடைக்குள் தஞ்சம் புகுந்த அமெரிக்கர்.. வெளியே போகச் சொன்ன இந்தியர்.. சுத்தியலால் 50 முறை.. கொடூரம்!

Su.tha Arivalagan
Jan 30, 2024,06:04 PM IST

அட்லாண்டா: அமெரிக்காவில் வீடு இல்லாத அமெரிக்கருக்கு தங்களது கடைக்குள் தஞ்சம் கொடுத்திருந்தனர் அந்தக் கடை உரிமையாளர்கள். ஆனால் அவர் அதை நிரந்தரமாரக்கவே வெளியே போகக் கூறியுள்ளனர். தன்னை வெளியே போகச் சொன்ன இந்தியாவைச் சேர்ந்த பார்ட் டைம் ஊழியரை, தாக்கி அவரது தலையில் சுத்தியலால் 50க்கும் மேற்பட்ட முறை கொடூரமாக அடித்தே கொன்று விட்டார் அந்த அமெரிக்கர்.


இரக்கம் காட்டியவருக்கு கடைசியில் கொலை என்ற பரிசைக் கொடுத்த அந்த அமெரிக்கரை தற்போது போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உதவி செய்து வந்தவரை அந்த நபர் நல்லபடியாகத்தான் பழகியுள்ளார். ஆனால் உதவியை நிறுத்தியதும் அவர்  கொலை செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.


கொலை செய்யப்பட்ட இந்தியரின் பெயர் விவேக் சைனி. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜார்ஜியா மாகாணத்தில் எம்பிஏ படித்து வந்தார். அட்லாண்டாவில் உள்ள ஒரு சூப்பர் ஸ்டோரில் பார்ட் டைம் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.




அந்தக் கடைக்கு ஜூலியன் பால்க்னர் என்ற அமெரிக்கர் அடிக்கடி வந்து உதவி கேட்டுள்ளார். அவர் வீடு இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர் ஆவார். தற்போது அமெரிக்காவில் குளிர் காலம் என்பதால் இந்தக் கடையைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக சைனி, அடிக்கடி தண்ணீர், பிரெட் போன்றவற்றைக் கொடுத்து உதவியுள்ளனர். போட்டுக் கொள்ள ஜெர்க்கினும் கூட கொடுத்துள்ளனர்.


ஆனால் கிட்டத்தட்ட கடையையிலேயே அவர் நிரந்தரமாக தங்கும் அளவுக்கு வந்து விடவே கடைக்காரர்கள் அவரை வெளியேறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று பால்க்னரிடம் சென்ற சைனி, கடையை விட்டு வெளியே போகாவிட்டால் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


இதைக் கேட்டு ஆவேசமடைந்த பால்க்னர், தன்னிடம் இருந்த சிறிய சுத்தியலை எடுத்து சைனியை கடுமையாக தாக்கினார். இதை சைனி எதிர்பார்க்கவில்லை. அடிபட்டு கீழே விழுந்து விட்டார். பால்க்னர் அத்தோடு விடவில்லை. கீழே விழுந்த சைனியை தலையிலேயே கடுமையாக தாக்கியுள்ளார். விடாமல் 50க்கும் மேற்பட்ட முறை அவர் கொடூரமாக தாக்கியதில் சைனி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


போலீஸார் விரைந்து வந்தனர். கடைக்குள் சுத்தியலும் கையுமாக நின்று கொண்டிருந்த  பால்க்னரை சுத்தியலை கீழே போடுமாறு எச்சரித்தனர். அவரும் உடனடியாக கிழே போட்டு விட்டு சரணடைந்தார். அவரிடம் மேலும் ஒரு சுத்தியலும் சட்டைக்குள் இருந்தது. அவரைக் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.


இந்தியா கடும் கண்டனம்


இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அட்லாண்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், மிகவும் மோசமான ஈவு இரக்கமற்ற இந்த கொடும் செயலை இந்திய அரசு மிகக் கடுமையாக கண்டிக்கிறது. சைனியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. சைனியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 26ம் தேதி இந்தியாவுக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்தார் சைனி. ஆனால் அதற்கு முன்பாக இந்த துயர முடிவு அவரைத் தேடி வந்து விட்டது. 


"உப்பிட்டவரை உள்ளளவும் நினை".. என்ற பழமொழியை அமெரிக்கர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லித் தருவதில்லை போலும்!