அமெரிக்காவுக்கு நிகராக மாறும் இந்திய நெடுஞ்சாலைகள்.. நிதின் கத்காரி பெருமிதம்

Su.tha Arivalagan
Mar 27, 2023,12:12 PM IST

ராஞ்சி: இந்தியாவின் நெடுஞ்சாலைகள் 2024ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளுக்கு நிகராக மாறும் என்று மத்திய நெுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் வாஜ்யாப் பிரதமராக இருந்த காலத்தில் முகம் மாறத் தொடங்கியது. அதுவரை 2 வழிச் சாலையாகத்தான் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் இருந்து வந்தன. ஆனால் வாஜ்பாய் காலத்தில்தான் நான்கு வழிச்சாலை, பின்னர் ஆறு வழிச்சாலை, 8 வழிச்சாலை என இது புது வாழ்வு கண்டது.



காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று நெடுஞ்சாலைகள் நீண்டு கிடக்கின்றன. நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் விரைவாக செல்லும் வாய்ப்புகள் இன்று கிடைத்துள்ளன. இதற்கு வாஜ்பாய், பின்னர் வந்த மன்மோகன் சிங் ஆகியோர்தான் முக்கியக் காரணம். அதேபோல தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும் நெடுஞ்சாலைக் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

நெடுஞ்சாலை வசதிகள் மேம்பட்டால்தான் தொழில் வளம் பெருகும், போக்குவரத்து எளிதாகும் என்பதால் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டுவாக்கில் இந்தியாவின் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு, அமெரிக்காவுக்கு நிகராக மாறும் என்று அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. அதை ஒரு இயக்கமாக கருதி நாங்கள் பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். பசுமை வழிச்சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் பாலங்கள் கட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பாரத் மாலா திட்டம் 2க்கு மத்திய அமைச்சரவை விரைவில் கிடைத்து விடும். அதன் பின்னர் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும்.

2024க்குள் இந்திய நெடுஞ்சாலைகள், அமெரிக்க தரத்துக்கு இணையானதாக மாறியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் கத்காரி.