HBD Dhoni: இந்தியர்கள் கொண்டாடும் நம்பர் 7.. தோனி ரசிகர்களுக்கு அதுதானே என்றென்றும்.. ஹெவன்!

Aadmika
Jul 07, 2024,07:10 PM IST

டில்லி :  கூல் கேப்டன், தல என்று ரசிகர்களால் இந்த நொடி வரை அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி இன்று தனது 43வது பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதும் ரசிகர்கள் தோனி பிறந்த நாளை விதம் விதமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் கண்ட மிகச் சிறந்த கேப்டன்களில் சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் தோனி. கபில் தேவுக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடிய கேப்டன் என்றால் அது தோனி மட்டுமே. இந்தியாவின் முதல் உலகக் கோப்பையை கபில் தேவ் வாங்கிக் கொடுத்த பிறகு எத்தனையோ கேப்டன்கள் வந்து விட்டார்கள். ஆனால் யாருக்குமே கை கூடாத அந்த உலகக் கைப்பையை 2011ம் ஆண்டு தட்டிக் கொண்டு வந்து கொடுத்து அசத்தியவர் தோனிதான்.


அதற்கு முன்பு 2008ம் ஆண்டு இந்தியாவின் முதல் டி20 உலகக் கோப்பையையும் தோனி வென்று அசத்தினார்.  சர்வதேச அளவில், தோனி மட்டுமே அனைத்து வகை உலகக் கோப்பைகளையும், ஐசிசி சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முக்கியமானது. அந்த சாதனையை இனி யார் வந்து முறியடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. நிச்சயமாக, இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன் தோனி என்பதில் சந்தேகம் இல்லை.




இன்று தோனியின் 43வது பிறந்த நாள். இதை தனது மனைவி சாக்ஷியுடன் சிம்பிளாக கேக் வெட்டிக் கொண்டாடினார் தோனி. ரசிகர்களும் தல தோனிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சினிமா ஸ்டார்களுக்கு வைப்பது போல கட் அவுட் வைத்தெல்லாம் சில ஊர்களில் கொண்டாடியுள்ளனர்.


இதற்கிடையே, இங்கிலாந்தின் நார்த்தாம்ப்டன் நகரில் உலக லெஜன்டுகளுக்கான சாம்பியன்ஷிப் என்ற கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் இந்திய லெஜன்ட் அணி யுவராஜ் சிங் தலைமையில் கலந்து கொண்டுள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தோனி பங்கேற்கவில்லை. இது தோனி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மற்ற முன்னணி வீரர்கள் விளையாடுவது மகிழ்ச்சி என்றாலும், தோனி இல்லாத போட்டி சுவாரஸ்யமாக இருக்காது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தோனி, 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். ஆனாலும் ஐபிஎல் போட்டிகளில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அதனால் அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. இருந்தாலும் நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் சரி, தற்போது நடக்க போகும் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியிலும் தோனி விளையாடவில்லை. இதற்கு காரணம் பிசிசிஐ.,யின் விதிமுறை தானாம்.


பிசிசிஐ விதிகளின் படி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர் வேறு எந்த லீக் (அணி)  போட்டிகளிலும் விளையாடக் கூடாதாம். அப்படி மீறி அவர் விளையாடினால் அதற்கு பிறகு அவர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுமாம். 2008 ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தோனி, 2024ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடினாலும், கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை, ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக தான் அவர் ஒத்தி வைத்துள்ளாராம்.