கப்போடு வந்தாச்சு பிகிலேய்ய்ய்ய்... டெல்லி திரும்பிய இந்திய அணி.. கேக் வெட்டி செம உற்சாகம்!

Manjula Devi
Jul 04, 2024,10:38 AM IST

டெல்லி:   T20 உலக உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து தாயகம் திரும்பியது. டெல்லி வந்த இந்திய அணிக்கு மிக மிக உற்சாகமான வரவேற்பு அளித்தது.


டெல்லி திரும்பிய இந்திய அணியினர் தாங்கள் தங்கும் ஹோட்டல் மவுரியாவுக்குச் சென்றனர். அங்கு கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கேக் வெட்டி இந்திய வீரர்கள் கோப்பை மகிழ்ச்சியை தாயகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். இதனை தொடர்ந்து மாலை மும்பைக்கு செல்ல இருக்கின்றனர். அங்கு பிசிசிஐ சார்பில் வாங்கடே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.




t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில், கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த சனிக்கிழமை போட்டிகள் முடிந்தது மேற்கிந்திய தீவுகளில் இருந்து இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த நிலையில்தான் அங்கு பெரில் சூறாவளி தாக்கியது. இதனால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்ப மூன்று நாட்கள் தாமதமானது. சூறாவளி ஒரு வழியாக ஓய்ந்த நிலையில், பிசிசிஐ  சார்பாக சிறப்பு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அவர்களது குடும்பத்தினருடன் நேற்று மதியம் பார்படாஸ் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். 


விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்றனர்.