கணவன், மனைவி, மகள்.. இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்கள்.. மர்மமான முறையில் அமெரிக்காவில் மரணம்!
நியூயார்க்: இந்தியாவை பூர்வீமாகக் கொண்ட மிகப் பெரிய கோடீஸ்வர தம்பதி, தங்களது மகளுடன் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசட்ஸ் மாகாணத்தில் அவர்கள் வசித்து வந்து 50 லட்சம் டாலர் மதிப்பிலான சொகுச வீட்டிலிருந்து 3 பேரின் பிணங்களும் மீட்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்கள் விவரம் - ராகேஷ் கமல் (57), மனைவி டீனா (54), மகள் ஏரியானா (18). டோவர் பகுதியில் இவர்களது வீடு உள்ளது. மாசசூசட்ஸ் தலைநகர் போஸ்டன் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த டோவர் நகரம் உள்ளது. ராகேஷ் கமல் உடலுக்கு அருகில் துப்பாக்கி இருந்ததை போலீஸார் கண்டறிந்து மீட்டுள்ளனர். 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மனைவி, மகளைக் கொன்று விட்டு ராகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் தெரியவில்லை. இருப்பினும் இதுவரை 3 பேரும் என்ன மாதிரியான சம்பவத்தால் உயிரிழந்தனர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
எடுநோவா என்ற நிறுவனத்தை முன்பு டீனாவும், அவரது கணவரும் இணைந்து நடத்தி வந்தனர். இப்போது அதை மூடி விட்டனர். சமீப காலமாக நிதிப் பிரச்சினையில் ராகேஷ் கமலும், டீனாவும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவர்களது மரணச் சம்பவம் நடந்துள்ளது.