இந்தியாவிலிருந்து சென்ற பஸ்.. நேபாள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. 14 பேர் பலி
காத்மாண்டு: இந்தியாவிலிருந்து சென்ற பஸ் நேபாள நாட்டில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. நேபாள நாட்டின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்சியாங்கிடி ஆற்றைக் கடக்க முயன்றபோது பஸ் ஆற்றுக்குள் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தப் பேருந்தானது காத்மாண்டுவிலிருந்து பொக்காரா நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பேருந்தின் பதிவு எண் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இப்படித்தான் கடந்த மாதம் நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் நடந்த பெரும் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் 2 பஸ்கள் கவிழ்ந்தன. அந்த விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்