யூடியூப் சிஇஓ ஆகிறார் இந்தியஅமெரிக்கர் நியால் மோகன்!

Su.tha Arivalagan
Feb 17, 2023,10:35 AM IST
டெல்லி: உலகின் மிகப் பெரிய வீடியோ தளமான யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவியில் இந்தியரான நியால் மோகன் அமர்த்தப்படவுள்ளார். 



கடந்த 9 வருடமாக இந்தப் பொறுப்பில் இருந்த சூசன் ஓஜ்சிக்கி பதவி விலகியதைத் தொடர்ந்து மோகன் சிஇஓ ஆகிறார்.  தற்போது மோகன், தலைமை புராடக்ட் அதிகாரியாக இருக்கிறார்

தனது பதவி விலகல் குறித்து 54 வயதாகும் சூசன் கூறுகையில், எனது குடும்பம், உடல் நிலை, தனிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டவுள்ளேன். அதுகுறித்த நீண்ட நாள் கனவுகளுடன் இருந்தேன் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு சூசன்,கூகுளில் பணியாற்றியுள்ளார். அதன் விளம்பரப் பிரிவில் முதுநிலை துணை தலைவராக இருந்தவர் சூசன்.


தனுஷின் வாத்தி எப்படி இருக்கு?...ரசிகர்களை கவர்ந்தாரா? பல்பு வாங்கினாரா?


கூகுளின் ஆரம்பகால உறுப்பினர்களில் சூசனும் ஒருவர். அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 

யூடியூபின் புதிய சிஇஓ ஆக பதவியேற்கவுள்ள நியால் மோகன் இந்திய அமெரிக்கர் ஆவார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் தலைவர்களாக உள்ளனர். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாதெல்லா இருக்கிறார்.அடோப் சிஇஓவாக சாந்தனு நாராயண் பணியாற்றுகிறார். ஆல்பாபெட் சிஇஓவாக சுந்தர் பிச்சை உள்ளார். இந்திரா நூயி 12 வருடம் பெப்சிகோ நிறுவன சிஇஓவாக இருந்துள்ளார். இந்த வரிசையில் தற்போது நியால் மோகன் இணைகிறார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் என்ஜீனியரிங் படித்தவர் நியால் மோகன்.   யூடியூபுக்கு வருவதற்கு முன்பு கூகுளில் பணியாற்றியவர். 2015ம் ஆண்டு முதல் யூடியூபில் பணியாற்றி வருகிறார்.  யூடியூப் ஷார்ட்ஸ் வடிவத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக்கியவர் இவர். இதுதவிர மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் மோகன் பணியாற்றியுள்ளார். 

தலைமை செயலதிகாரி பதவியில் செயல்படுவதற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாக நியால் மோகன் தெரிவித்துள்ளார்.