ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்.. "சதம்" அடித்தது இந்தியா.. புதிய வரலாறு!

Su.tha Arivalagan
Oct 07, 2023,09:23 AM IST

டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக 100 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது இந்தியா.


சீனாவின் ஹாங்ஷோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தினசரி தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஒரு பதக்கம் விடாமல் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் இருந்து வருகிறது.  முதல் மூன்று இடங்களில் சீனா, ஜப்பான், கொரியா ஆகியவை உள்ளன.


இந்த நிலையில் இன்று இந்தியா தனது 100வது பதக்கத்தைப் பெற்றது. இந்திய மகளிர் கபடி அணி சீன தைபே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு 100வது பதக்கத்தை வென்று கொடுத்தனர். 




இந்திய அணிக்கு மேலும் சில பதக்கங்கங்கள் ஏற்கனவே உறுதியாகியுள்ளன. வில்வித்தை, பேட்மிண்டன், ஆடவர் கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. 


ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி 3வது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த முறை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது நினைவிருக்கலாம்.


இந்தியா இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்றதில்லை.  முதல் முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.