மணிப்பூரில் தவறு செய்தவர்களை விட மாட்டோம்.. பிரதமர் மோடி ஆவேசம்
Aug 10, 2023,06:07 PM IST
டெல்லி: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மணிப்பூர் குறித்துப் பேசாததால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் கூண்டோடு லோக்சபாவிலிருந்து வெளிநடப்புசெய்தன. ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் மணிப்பூர் குறித்து பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி.
லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சில தினங்களுக்கு முன்பு இந்தியா உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்று நான் கூறியிருந்தேன். பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் அது எப்படி நடக்கும் என்று கேட்டிருக்கலாம் அல்லது பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க தேவையான யோசனைகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனை இல்லை என்பதையே இது காட்டுகிறது. அவர்களுக்குப் புரிதல் இல்லை.
இந்தியா 3வது பொருளாதார சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும். அதை நான் அறிவேன். நீங்கள் 2028ம் ஆண்டு எனது அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது இந்தியா 3வது பொருளாதார சக்தியாக திகழும்.
1991ம் ஆண்டு நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. 204ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வளர்ச்சி அடைந்து உலகின் டாப் 5 பொருளாதார சக்திகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இது தானாகவா நடந்தது.. எங்களது கடும் உழைப்பு, பல்வேறு சீரமைப்புகள், அர்ப்பணிப்பு, திட்டமிடல் ஆகியவை காரணமாகவே இது நடந்தது.
காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தமிழ்நாட்டில் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. மேற்கு வங்காளத்தில் நம்பிக்கை இழந்து விட்டது. மக்களை அவர்கள் நம்பவில்லை. அவர்களால் மக்களுக்காக உழைக்க முடியவில்லை. காங்கிரஸ் மீது மக்கள் இழந்த நம்பிக்கை அதிகரித்து விட்டது. இந்தியாவின் பெயரை சேதமாக்கவே அவர்கள் துடிக்கிறார்கள்.
பாகிஸ்தானையே காங்கிரஸ் அதிகம் நம்புகிறது. பாகிஸ்தான் என்ன சொன்னாலும் நம்புகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் பற்றி எறிந்து கொண்டிருந்தது. அவர்கள் ஹரியத்தை நம்பினார்கள். காஷ்மீர் மக்களை நம்பவில்லை. நாங்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்தோம். விமானப்படையை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களை காங்கிரஸ் கட்சி சந்தேகித்தது, கேள்விகள் கேட்டது, விமர்சித்தது.
மணிப்பூரில் அமைதி திரும்பும்:
அராஜகத்தின் மறு பெயர்தான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி. அவர்கள் உயிருடன் இருக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. என்டிஏ என்ற வார்த்தையில் அவர்கள் சேர்த்துள்ள ஐ என்பது அராஜகம் என்பதைக் குறிப்பதாகவும். அதையும் 2 முறை சேர்த்துள்ளனர், இரட்டிப்பு அராஜகம். 26 கட்சிகளின் அராஜகம், அடக்குமுறைதான் இந்தக் கூட்டணி. தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் திருடி விட்டனர். அவர்களது இந்தியாவும் பொலிவிழந்து போகும்.
மணிப்பூருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றிருந்தார். அதுகுறித்து விரிவான விளக்கமும் அளித்துள்ளார். அந்த மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று நான் நம்புகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் அங்கு நிலைமையை சரி செய்ய தீவிரமாக முயன்று வருகிறோம். மணிப்பூரில் நடந்தது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறை செய்தவர்களை நாங்கள் விட மாட்டோம். மணிப்பூர���க்கு நாடே துணை நிற்கிறது. அங்குள்ள உயர்நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகள் கலவரத்திற்கு வித்திட்டு விட்டன. மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும். திரும்பும் என்று உறுதி அளிக்கிறேன்.