"இந்தியாவின் பெயரை மாற்றுவோம்.. வெளிநாட்டவர் சிலைகளை அகற்றுவோம்"
Sep 10, 2023,01:30 PM IST
கொல்கத்தா: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவோம்.. அதேபோல கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டுக்காரர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் என்பவர் கூறியுள்ளார்.
இந்தியா என்ற பெயரை மத்திய அரசு மாற்றப் போவதாக ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் திட்டம் இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால் பெயர் மாற்றம் நடைபெறுமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
ஜி20 மாநாடு விருந்து தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழில் பாரத் என்றுதான் பெயர் இடம் பெற்றிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜி20 மாநாட்டில் பேசியபோது அவருக்கு முன்பு வை்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிலும் பாரத் என்றுதான் இருந்தது. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், ஆளுநர்கள் பலரும் கூட பாரத் என்ற பெயரைத்தான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திலீப் கோஷ் என்ற மூத்த பாஜக தலைவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவோம். கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டுக்காரர்கள் சிலைகள் எல்லாம் அகற்றப்படும்.
பாரத் என்ற பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறி விடலாம். நாங்கள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்ததுமே இங்குள்ள வெளிநாட்டுக்காரர்கள் சிலைகள் எல்லாமே அற்றப்படும் என்றார் அவர்.
திலீப் கோஷ் பேச்சுக்கு மமதா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறது பாஜக. இந்தியா கூட்டணியின் எழுச்சியைப் பார்த்து பயந்து போயுள்ளது. இதனால் தான் நாட்டின் பெயரை மாற்றப் போவதாக கூறி வருகிறார்கள் என்று அக்கட்சி கூறியுள்ளது.