காத்திருக்கிறது.. ஆசியாவிலேயே மிகப் பெரிய சம்பள உயர்வு.. யாருக்கு தெரியுமா?
Jan 18, 2023,09:22 AM IST
மும்பை: ஆசியாவிலேயே மிகப் பெரிய சம்பள உயர்வினை இந்த ஆண்டு இந்தியப் பணியாளர்கள் பெறுவார்கள் என்று கோர்ன் பெர்ரி சர்வே கூறியுள்ளது.
கடந்த ஆண்டு 9.4 சதவீத அளவிலான ஊதிய உயர்வை இந்தியர்கள் பெற்றார்கள். இந்த ஆண்டு அது 30 சதவீத அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ன் பெர்ரி என்பது கன்சல்டிங் நிறுவனமாகும். இந்த ஆண்டு ஹைடெக் தொழில் நிறுவனங்கள், லைப் சயின்ஸ், ஹெல்த்கேர் நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் உலக அளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு கோடிக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் கூட வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 8 லட்சம் பேர் பணியாற்றக் கூடிய 818 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை கோர்ன் பெர்ரி வெளியிட்டுள்ளது. இதில் 61 சதவீத நிறுவனங்கள், முக்கியமான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனவாம்.
இந்தியாவில் இந்த ஆண்டு 9.8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம். அதேசமயம், சீனாவில் 5.5, ஆஸ்திரேலியாவில் 3.5, ஹாங்காங்கில் 3.6, இந்தோனேசியாவில் 7, கொரியாவில் 4.5, மலேசியாவில் 5, நியூசிலாந்தில் 3.8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம் பிலிப்பைன்ஸில் 5.5, சிங்கப்பூரில் 4, தாய்லாந்தில் 5, வியட்நாமில் 8 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்குமாம்.