இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் இந்திய சாட்டிலைட்!

Su.tha Arivalagan
Jan 03, 2024,04:10 PM IST

டெல்லி:  இஸ்ரோ வெளிநாட்டு ராக்கெட் மூலம் தனது செயற்கைக் கோளை செலுத்தி ரொம்ப காலமாகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக தனது செயற்கைக் கோள் ஒன்றை அமெரிக்க ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது இந்தியா.


வழக்கமாக பிரெஞ்சு ராக்கெட்டுகளைத்தான் இந்தியா பயன்படுத்தும். ஆனால் தற்போது அமெரிக்க ராக்கெட்டை நாடியுள்ளது. அதுவும், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோளை இந்தியா செலுத்தவுள்ளது.


இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக் கோளை, பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தவுள்ளது. இதுவரை பால்கன் ராக்கெட் மூலம் இந்தியா எந்த செயற்கைக் கோளையும் இதுவரை செலுத்தியதில்லை. இதுதான் முதல் முறையாகும்.




மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் அளவிலான ராக்கெட் நம்மிடம் இல்லை. அது இன்னும் ஒரு பெரிய குறையாகவே உள்ளது. வேறு எந்த ராக்கெட்டும் தயார் நிலையில் இல்லாததால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை அணுக வேண்டியதாகி விட்டது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். வழக்கமாக பிரான்ஸ் நாட்டு ராக்கெட்டுகளைத்தான், மிகப் பெரிய செயற்கைக்கோள்களை ஏவ இந்தியா நாடும் என்பது நினைவிருக்கலாம்.


இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. விரைவில் புளோரிடாவிலிருந்து பால்கன் ராக்கெட் மூலம், ஜிசாட் 20 விண்ணில் செலுத்தப்படும்.


ஜிசாட் 20 செயற்கைக் கோள் மிகவும் எடை கொண்டது. அதாவது 4700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு துல்லியத்தை மேலும் அதி நவீனப்படுத்த இது உதவும்.