சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
Feb 22, 2025,07:06 PM IST
துபாய்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் படு ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் மோதல் நாளை துபாயில் நடைபெறவுள்ளது.
துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் அது வெறும் ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல. அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளின் மோதல். குறிப்பாக ஐசிசி போட்டிகளில் இந்த இரு அணிகளின் மோதல் உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. அதை இந்திய ரசிகர்கள் மறக்கவில்லை. அந்த தோல்விக்கு இன்று பழி தீர்க்க நிச்சயம் இந்தியா முயலும். அதே சமயம் பாகிஸ்தான் அந்த வெற்றியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்.
இந்தியாவின் பேட்டிங் திறமை- வலிமையான முதல் வரிசை
இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வலுவான தொடக்கத்தை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதில் முதல் போட்டியில் கோலி சொதப்பினார். ரோஹித் சர்மா சமாளித்து விட்டார். சுப்மன் கில் அசத்தினார்.
நடுக்களத்தில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்திரத்தன்மை கொடுப்பார்கள். முதல் போட்டியில் ராகுல் ஜொலித்தார். ஆனால் ஸ்ரேயஸ் சோபிக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா ஒரு பவர் ஹிட்டராக இறுதி ஓவர்களில் ஆட்டத்தை வேகமாக நகர்த்துவார் என்று நம்பலாம்..
பந்து வீச்சு
இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் விளையாடுவது மிகப்பெரிய சேதமாக இருக்கலாம். ஆனால் அதை முகம்மது ஷமி நிரப்பி விட்டார். முதல் போட்டியில் அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. இன்று கூடுதல் நெருப்பை அவர் கக்கினால் போதும், பாகிஸ்தானை காலி செய்து விடலாம்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் கூடுதல் பலமாக இருப்பார்கள். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள், பாகிஸ்தானின் இடது கை பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தும் திறன் கொண்டவர்கள்.
பாகிஸ்தான் அணி நிலவரம்
பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை இந்தியாவை விட வீக்தான். பாபர் அஸாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அணியின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஆனால், நடுப்பகுதியில் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், மற்றும் இஃப்திகார் அஹ்மத் ஆகியோர் சரியான பார்மில் இல்லை. இது அவர்களுக்கு பலவீனமே.
பந்து வீச்சு மட்டுமே பாகிஸ்தானுக்கு சற்று வலுவான ஆயுதமாக உள்ளது. ஷஹீன் அஃப்ரீதி, நசீம் ஷா, மற்றும் ஹரிஸ் ரௌஃப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானின் மிகப்பெரிய பலம். குறிப்பாக ஷஹீன் அஃப்ரீதி பவர்பிளேயில் சிறப்பாக வீசக் கூடியவர்.
இதைத் தவிர பாகிஸ்தானுக்கு பாதகமான இன்னொரு விஷயம், துபாயில் அவர்களது வெற்றி சதவீதம் மோசமாகவே உள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் கையே இப்போதைக்கு ஓங்கி இருக்கிறது.
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடினால், இந்தியா 300+ ஸ்கோரை அடைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் நீண்ட நேரம் ஆடினால், பாகிஸ்தான் கை ஓங்கலாம்.