காசாவில் போரை நிறுத்துங்கள்".. இஸ்ரேலை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம்.. ஆதரித்த இந்தியா
டெல்லி: காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போரைநிறுத்தக் கோரி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி, தரைவழி தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் வாயிலாக ஹமாஸ் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணை கைதிகளும் , இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் தற்போது இஸ்ரேலை சுற்றியுள்ள எகிப்து, ஜோர்டன் உள்ளிட்ட நாடுகள் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வர தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தற்போது வாக்களித்துள்ளது.
நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். மனிதாபிமான உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய வரைவு தீர்மானம் ஒன்று நேற்று டிசம்பர் 12ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வரைவு தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதே போன்ற தீர்மானம் கடந்த அக்டோபரில் ஐநா முன்மொழிந்தது. மனிதாபிமான முறையில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அந்த தீர்மானத்தை அப்போது இந்தியா புறக்கணித்தது என்பது நினைவிருக்கலாம். ஐ.நா.வின் புதிய தீர்மானத்திற்கு அல்ஜீரியா, பக்ரைன், ஈராக் ,குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தனர்.
அதேசமயம், வழக்கம் போல அமெரிக்கா, இஸ்ரேல், உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 23 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து வந்தால் உலக நாடுகளின் ஆதரவை அது இழக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் எதையும் கண்டு கொள்வதாக இல்லை.