அசத்தும் இந்தியா.. 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள்!

Su.tha Arivalagan
Apr 24, 2023,04:40 PM IST
டெல்லி: அடிப்படைக் கட்டமைப்புப் பிரிவில் இந்தியா படு வேகமாக வளர்ந்து வருவதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால் முதலில் அடிப்படக் கட்டமைப்பு வளர்ச்சி பெற வேண்டும். சாலைகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடிப்படை. எனவேதான் எப்போதுமே சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசுகளும் சரி, மாநில அரசுகளும் சரி முக்கியத்துவம் கொடுப்பார்கள்.



எந்த மாநிலத்தில் நல்ல சாலை வசதி உள்ளதோ அந்த மாநிலமே பொருளாதாரத்திலும் உயர்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் இதுவரை நடந்திராத மிகப் பெரியவிஷயம் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் 97,830 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. தற்போது இவை 2023ம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 155 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.

2014-15ம் ஆண்டு காலகட்டத்தில ஒரு நாளைக்கு 12.1 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. 2021-22ம் ஆண்டு இது ஒரு நாளைக்கு 28.6 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.