சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்த நாடுகள் பட்டியலில்.. இந்தியாவுக்கு 8வது இடம்!

Su.tha Arivalagan
Mar 17, 2023,11:17 AM IST

டெல்லி: உலகிலேயே மிகவும் அசுத்தமான மாசு சீர்கேட்டுடன் கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. 

2021ம் ஆண்டு இந்தியா 5வது இடத்தில் இருந்தது. தற்போது 8வது இடத்திற்கு வந்துள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்யூ ஏர் என்ற நிறுவனம் " உலக காற்று தர அறிக்கை" ஒன்றை தயாரித்துள்ளது. அதில்தான் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 131 நாடுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் மாசு சீர்கேடு கணக்கிடப்படுகிறது.




மொத்தம் 7300 நகரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதில் அதிக அளவில் இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு 2200 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது அது அதிகரிக்கப்பட்டு 7300 நகரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.


இந்தியாவின் மாசு சீர்கேட்டில் முக்கியப் பங்கு வகிப்பது போக்குவரத்துத்துறைதான். வாகனப் புகை மாசு அந்த அளவுக்கு உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தொழில்துறை உள்ளது. அதேபோல நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் மின் நிளையங்கள், பயோமாஸ் எரிப்பு ஆகியவையும் இதில் அடக்கமாகும்.


உலகின் மிகவும் மோசமான மாசு சீர்கேட்டுடன் கூடிய நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்தையும், சீனாவின் ஹோடான் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 3வது இடம் இந்தியாவின் பிவான்டிக்கும், 4வது இடம் டெல்லிக்கும் கிடைத்துள்ளது. 


டாப் 10 சீர்கேடுடன் கூடிய நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் 6 இடம் பெற்றுள்ளன. டாப் 20ல் 14 நகரங்கள் இந்தியவைச் சேர்ந்தவைதான். அதேபோல டாப் 50 நகரங்களில் 39 இந்திய நகரங்கள் ஆகும்.  டாப் 100 நகரங்களில் 65 இந்திய நகரங்கள் ஆகும். டெல்லியும், புது டெல்லியும் டாப் 10 நகரங்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் பெருநகரங்களைப் பொறுத்தவரை டெல்லிதான் மிகவும் மாசுடன் கூடிய நகரமாக உள்ளது.  அடுத்த இடத்தில் கொல்கத்தா,  மும்பை, ஹைதராபாத், பெங்களூரு,  சென்னை ஆகியவை உள்ளன. 


உலகின் டாப் 10 மாசு நாடுகள் வரிசையில்,   சாட் நாடு முதலிடத்தில் உள்ளது. 2வது இடம் ஈராக்குக்குக் கிடைத்துள்ளது.  அடுத்த இடம் பாகிஸ்தானுக்கு. இந்தியா 8வது இடத்தில் உள்ளது.