வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி!
Aug 20, 2023,03:56 PM IST
டெல்லி : வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும், இந்த வரி விதிப்பு நடைமுறை இந்த ஆண்ட டிசம்பர் 31 வரை தொடரும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதல் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. தென்மாநிலங்களில் வெங்காயம், தக்காளியின் விலை குறைந்து வழக்கமான நிலைக்கு திரும்பி இருந்தாலும், வட மாநிலங்களில் இன்னும் தக்காளி விலையோ, வெங்காயத்தின் விலையோ குறைந்த பாடில்லை. இதனால் தென் மாநிலங்களிலும் மீண்டும் விலை உயருமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை செப்டம்பர் மாதம் வரை உயர்ந்து தான் காணப்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதமும் வெங்காய விலை உயரும் என சொல்லப்படுகிறது. வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்வு தொடர்கதையாகி விட்டதாக ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது.
2023 - 24 ஆண்டு சீசனுக்காக வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சராசரியாக 3 லட்சம் டன் இருப்பு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2022-23 ம் ஆண்டில் 2.51 லட்சம் டன் வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டிலும் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏற்றுமதிக்கு புதிய வரி அமல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.