கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவு!
டெல்லி: கனடா தூதரகத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகளை வருகிற சனிக்கிழமை நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் கனடாவில் உள்ள இந்தியத் தூதரைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா - கனடா இடையே காலிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் தொடர்பாக முற்றி வரும் மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனடாவிலிருந்தபடி இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள் அங்கு சமீபத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டூருடியூ குற்றம் சாட்டியதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் உரசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில், இந்தியத் தூதர் சஞ்சய் குமார் சர்மாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா அரசு கூறியுள்ளது. இதனால் மத்திய அரசு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தது. கனடாவின் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கூறுகையில், இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி சஞ்சய் குமார் சர்மா. கடந்த 36 வருடங்களாக அவர் அயலகப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜப்பான், சூடான் நாடுகளில் அவர் தூதராக இருந்துள்ளார். இத்தாலி, துருக்கி, வியட்நாம், சீனா ஆகிய நாடுகளிலும் அவர் தூதராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர் மீது கனடா அரசு குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றி வரும் 6 அதிகாரிகளையும் அது நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. அவர்களின் விவரம்: தற்காலிக ஹை கமிஷனர் ஸ்டுவர்ட் ராஸ் டீலர், துணைத் தூதர் பேட்ரிக் ஹெர்பர்ட், முதன்மை செயலாளர் மேரி கேத்தரின் ஜோலி, முதன்மை செயலாளர் இயான் ராஸ் டேவிட் ரைட்ஸ், முதன்மை செயலாளர் ஜேம்ஸ் சுபிகா, முதன்மை செயலாளர் பாலா ஒரிஜுவேலா ஆகியோரை இந்தியாவை விட்டு அக்டோபர் 19ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்குள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்