சிங்கப்பூருக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதி.. இந்தியா முடிவு
Aug 31, 2023,02:06 PM IST
டெல்லி : சிறப்பு நட்புறவின் அடிப்படையில் சிங்கப்பூருக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதியை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டில் அரிசி விலையை கருத்தில் கொண்டும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஜூலை 20 ம் தேதி முதல் பாஸ்மதி அரிசி அல்லாத பிற ரக அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால் உலக அளவில் பிற நாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அரிசி வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் இந்தியாவிற்கு கோரிக்கை வைத்து வந்தன. வெளிநாடுகளில் வாழும் மக்களும் அரிசிக்கு மாற்றாக உள்ள பொருட்களை தேட துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் அரிசி ஏற்றுமதிக்கான தடையை சிங்கப்பூர் நாட்டிற்கு மட்டும் விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்கு மட்டும் ஏன் இந்த விதி விலக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து இது பற்றி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கான செய்தி தொடர்பாளர் அரிந்தம் பங்சி, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே மிக நெருங்கிய நல்லுறவு உள்ளது.
இரு நாடுகளும் நெருங்கிய பொருளாதார உறவு, மக்கள் உறவு கொண்டுள்ளன. அங்கிருப்பவர்கள் இங்கு வருவதும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதும் அதிகம். இந்த சிறப்பு நட்புறவின் அடிப்படையிலேயே சிங்கப்பூரின் உணவு தேவையை பாதுகாப்பு கூட்டத்தில் நடந்த ஆலோசனையை அடுத்து சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்.