ஆசிய சாதனை படைத்த.. சென்னை தொடர் பாடல் நிகழ்ச்சி.. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பாராட்டு!

Su.tha Arivalagan
Jan 26, 2024,10:57 AM IST

சென்னை: ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக சென்னையில் 220 பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டு பாடிய தொடர் பாடல் நிகழ்ச்சி தற்போது இந்திய சாதனைப் புத்தகத்தின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னை தி.நகர் பிட்டி தியாகராயர் அரங்கில், பீனிக்ஸ் க்ரூ கிளப் சார்பில் ஒரு சாதனைப் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 220 பாடகர்கள், பாடகியர் கலந்து கொண்டு எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவாக அவரது  பாடல்களைத் தொடர்ச்சியாக பாடினர்.  மொத்தம் 110 டூயட் பாடல்களை, 10 மணி நேரம் 30 நிமிடம் விடாமல் பாடினர். இது ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்வு தற்போது இந்தியா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 




பீனிக்ஸ் க்ரூ கிளப் சார்பில் அதன் நிறுவனர்களான டி. ரமேஷ் மற்றும் கோமதி ஞானப்பிரகாசம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மிகப் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி அமைந்து பெரும் வெற்றியைப் பெற்றது.


ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பி, இளம் வயதிலேயே இசை மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு இடம்  பெயர்ந்தார். அதன் பின்னர் தனது அபாரமான குரல் ஆற்றலால் பாடல்கள் பாடும் வாய்ப்புகளைப் பெற்ற எஸ்.பி.பி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என நாட்டின் பல்வேறு மொழிகளிலும் கிட்டத்தட்ட  40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


மறைந்தும் வாழும் எஸ்.பி.பி


எஸ்.பி.பி. மறைந்து விட்டாலும் கூட அவரது பாடல்களைக் கேட்காமல் யாரும் எழுவதும் இல்லை, துயில்வதும் இல்லை. காதல், சோகம், பாசம், அன்பு, நட்பு, வருத்தம், வேதனை, தத்துவம் என்று எந்த சுவையாக இருந்தாலும் அதில் தனது அழுத்தமான குரலாலும், பாடல்களாலும் தடம் பதித்துச் சென்றவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது நினைவுகளைப் போற்றும் வகையில்தான் பீனிக்ஸ் க்ரூ குழு சார்பில் இந்த தொடர் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மிகப் பெரிய அளவில் அமைந்ததோடு மட்டுமல்லாமல், சமீப காலத்தில் எஸ்.பி.பிக்கு செலுத்தப்பட்ட சிறந்த பாடல் அஞ்சலி நிகழ்வாகவும் மாறி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்வு குறித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தனது இதழில் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.