தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.. பிரதமர் மோடி, எகிப்து பிரதமர் அறைகூவல்

Su.tha Arivalagan
Jan 26, 2023,10:40 AM IST
டெல்லி: தீவிரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியும் கூறியுள்ளனர்.



இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்து கொண்டுள்ளார். இதையொட்டி நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சினை குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவத்ரா கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களம் கேட்டுக் கொண்டனர். தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித சகிப்புதன்மையும் காட்டக் கூடாது என்றும் இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.

தீவிரவாதத்தை  சில நாடுகள் வெளியுறவுக் கொள்கை போல பயன்படுத்துவதையும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே குரலில் கண்டித்தனர் என்று தெரிவித்தார்.