எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்.. சரியான நேரத்தில் சரியான முடிவு.. மல்லிகார்ஜூன கார்கே

Su.tha Arivalagan
Jun 05, 2024,10:38 PM IST

டெல்லி: இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமரும். அதேசமயம், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.


இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் வெற்றி தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், பாசிச அரசை தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம். மக்கள் தந்த தீர்ப்பு பிரதமர் மோடிக்கு எதிரானது.  ஆனால் அவரும் சரி, பாஜகவும் சரி மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவே விரும்புகிறார்கள். இருப்பினும் இப்போதைக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே விரும்புகிறோம். தொடர்ந்து பாசிச அரசை எதிர்ப்போம்.  தேவையான நேரத்தில் தேவையான முடிவை எடுப்போம். மக்களின் அபிலாஷைகளை பாஜக புறம் தள்ளுவதை அனுமதிக்க மாட்டோம்.




இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். நமது அரசியல் சாசனத்தைக் காக்கும் யோசனை யுடன் கூடிய, பொருளாதார சமூக, அரசியல் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள யார் வேண்டுமாலும் இந்தியா கூட்டணியில் இணையலாம் என்றார் கார்கே.


முன்னதாக சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோரை மீண்டும் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த இரு தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது என்று முடிவெடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக கடிதமும் கொடுத்து விட்டதால் அந்த யோசனையை இந்தியா கூட்டணி தலைவர்கள் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.


பிரதமர் மோடி ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!


அதேசமயம், தேர்தல் தீர்ப்பு பிரதமர் மோடிக்கு எதிரானது என்பதால் அவர் பதவி விலக வேண்டும், மீண்டும் பிரதமராகக் கூடாது என்ற கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது இந்தியா கூட்டணி.


நடந்து முடிந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு 232 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸின் பங்கு 99 ஆகும். பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சிக்கு 240 இடங்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கவுள்ளது.