மும்பையில் மாஸ் காட்டிய "இ.ந்.தி.யா.".. மெகா கூட்டணியின் 3வது கூட்டம்!

Su.tha Arivalagan
Aug 31, 2023,07:13 PM IST

மும்பை: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று மும்பையில் கூடியது. நாளை வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய அளவில் ஒன்று கூடி இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. வலுவான பல்வேறு எதிர்க்கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, ஓரணியில் நிறுத்தி பாஜகவை எதிர்ப்பதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.



பாட்னாவில் இக்கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்றது. 2வது கூட்டம் பெங்களூரில் நடந்தது. இன்று மும்பையில் 3வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 28 கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே சரத் பவார் தெரிவித்திருந்தார்.




காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின்தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இன்று மாலை  3 மணிக்கு முதலில் பிரஸ் மீட் நடைபெற்றது. ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர் வைத்தார். அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. சாதாரண முறையிலான சந்திப்பாகும் இது. அதைத் தொடர்ந்து இரவு விருந்து நடைபெறும். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இதை அளிக்கிறார்.  அத்தோடு இன்றைய நிகழ்வு முடிவடையும். நாளை காலை 10.15 மணிக்கு தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும்.  




காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணியின் லோகோ வெளியிடும் நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர் மாநாடு தொடங்கும். 2 மணி வரை கூட்டம் நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி சார்பில் மதிய உணவு விருந்து அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து 3. 30 மணிக்கு தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.