"இந்தியா"வை சாதாரணமாக எடுத்துக்கக் கூடாது.. மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
Oct 07, 2023,12:15 PM IST
டெல்லி: இந்தியா கூட்டணியை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அது உண்மையான சவால்தான் என்று மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
பாஜகவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் பொறுத்தவரை யாரையும் நாங்கள் சாதாரணாக எடை போடுவதில்லை. அந்த வகையில் இந்தியா கூட்டணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அது உண்மையான சவால்தான். பாஜகவின் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவருமே தேர்தலை மிகத் தீவிரமாகவே எடுத்துக் கொள்கிறோம். எங்களை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்துகிறார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோத மிகச் சிறப்பானது. நாட்டின் ஒவ்வொரு தாய்மாருக்கும், சகோதரிகளுக்கும் அவர்களுக்குண்டான அரசியல் உரிமையை வழங்கி மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை. அதை காலாவதியாக்கி விட்டது. தனது ஆட்சிக்காலத்தில் இதுகுறித்து அது சீரியஸாகவே இல்லை. யாரும் அவர்களது கையைக் கட்டிப் போடவில்லை. இதை நிச்சயம் அவர்களால் நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோருகிறார் ராகுல் காந்தி. முதலில் அவரது குடும்பக் கட்சி, கடந்த 75 ஆண்டுகளில் ஓபிசி வகுப்பினருக்காகவும், பிற நலிவடைந்த பிரிவினருக்காகவும் என்ன செய்தது என்பதை அவர் பட்டியலிடட்டும் என்றார் தர்மேந்திரா பிரதான்.