நிலவுக்கு மட்டுமா.. ஆழ்கடலுக்கும் நாங்க ரெடி..  மிரட்ட வரும் "சமுத்திரயான்"!

Meenakshi
Sep 13, 2023,12:14 PM IST

சென்னை: கடலுக்கு அடியில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள கடலின் ரகசியங்களை கண்டறிந்து உலக நாடுகளை மிரட்ட வருகிறது சமுத்ரயான் திட்டம்.


நிலம் நீர் காற்று என இயற்கையின் எல்லா அம்சங்களையும் ஆராயும் ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. வல்லரசு நாடுகள் மட்டுமே இதுபோன்ற அறிவியல் ஆய்வுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பிற நாடுகளும் அறிவியல் ஆய்வுகளில் வலுவாக காலூன்ற ஆரம்பித்துள்ளன.


வருங்காலத்தில் உலகப் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும் என்று கணிக்கப்படும் இந்தியா இப்போது அறிவியல் ஆய்வுகளில் குறிப்பாக விண்வெளி ஆய்வுகளில் வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியானது, இந்தியாவின் பக்கம் உலக நாடுகளின் பார்வையைத் திருப்பியுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூரியன் குறித்த ஆய்வையும் இந்தியா தொடங்கியுள்ளது. ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இந்தியா செலுத்தியுள்ளது.




இந்த நிலையில் அடுத்து  கடலுக்கு அடியில் போய் உலக நாடுகளை பிரமிக்க வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. "சமுத்ரயான்" என்ற பெயரில் இதற்கான ஆய்வுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மூன்று நபர்களுடன் கூடிய சமுத்ராயன் மத்சியா 6000 என்ற ஆழ் கடல் ஆய்வுக் கப்பல் அனுப்பப்படவுள்ளது. 


விண்வெளி ஆராய்ச்சியை  விட அதிகமாக நம் ஆழ்கடலில்  அதிளவில் அதிசயங்கள் காத்து கொண்டு இருக்கின்றன. ஆழ் கடலில் அத்தனை ஆச்சரியங்கள் அடங்கியுள்ளன. அவற்றை கண்டறியும் விதமாக சமுத்திரயான் ரெடியாகி வருகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள்  ஏற்கனவே ஆளில்லா மற்றும் மனிதர்களுடனான ஆழ்கடல்  ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


உலக அளவில் மிகப் பெரிய கடல்பரப்பு இந்தியாவில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இதுவரை நாம் ஆழ் கடல் ஆய்வுகளில் பெரிதாக கவனம் செலுத்தியதில்லை. ஆழ்கடலில் இதுவரை  அறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் ரகசியங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என்று மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார். 


இதற்காக உருவாக்கப்பட்டதுதான் "மத்சியா 6000 வாகனம்". இதை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) வடிவமைத்து உருவாக்கியிருக்கிறது.

இதன் மூலம் இதுபோன்ற ஆய்வுகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.