ஆகஸ்ட் 15ம் தேதியும்... வேலை நாளாக அனுபவித்த.. கடைசி தலைமுறை யார் தெரியுமா?

Aadmika
Aug 14, 2024,05:31 PM IST

டில்லி : 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா, சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. கிட்டதட்ட 190 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுவதுமாக இந்திய தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள் பல இதற்குள் அடங்கி உள்ளன. இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் சமயத்தில் அவற்றை தெரிந்து கொள்ளலாம்.


முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கத்தை முதலில் முன் வைத்த நபர், ஹஷ்ரத் மொஹானி. 1929ம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் தான், பூரண சுயராஜ்யம் என்ற முழக்கத்தை அவர் முன் வைத்தார். அது மட்டுமல்ல 1930 ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பகுதி அளவு மட்டும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் 1930ம் ஆண்டு சுதந்திரத்தை அறிவித்ததுடன், பிரிட்டிஷ் அரசின் சட்டங்களுக்கு இனி கீழ்படிய கூடாது என்ற உறுதி மொழிகளையும் எடுத்துக் கொண்டு, அதன் படி செயல்படவும் துவங்கினர்.




1930ம் ஆண்டு முதல் 1946ம் ஆண்டு வரை ஜனவரி 26 தான் இந்திய சுதந்திர தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த தீவிர போராட்டத்திற்கு பிறகு தான் சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் வேகமெடுக்க துவங்கியது. ஒன்றுபட்ட இந்தியாவை இரண்டாக பிரித்து, 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க உள்ளதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 


1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி டில்லி செங்கோட்டையில் பிரபல இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான், தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஷெனாய் வாசித்து, நாட்டு மக்களுக்கு, நாடு சுதந்திரம் அடைந்ததை அறிவித்து, முதலில் வாழ்த்து சொன்னது பிஸ்மில்லா கான் தான். சுதந்திர இந்தியாவின் முதல் சுதந்திர தின உரையும் பிஸ்மில்லாத கான் ஆற்றியது தான். இந்த ஷெனாய் இசை நிகழ்ச்சியில், நாட்டின் முதல் பிரதமரான நேரும் கலந்து கொண்டார். 


அது மட்டுமல்ல 1947 ம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15 ம் தேதி என்பது வேலை நாள் தான். 1948 ம் ஆண்டு முதல் தான் ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவில் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15 விடுமுறை என குறிப்பிடப்பட்ட காலண்டர்களும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அடிமை விலங்கு உடைக்கப்பட்டு, சுதந்திரமாக செயல்பட துவங்கிய முதல் நாளான ஆகஸ்ட் 15 ஐ தான் இன்றும் நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்