சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான், ஓடியாங்க!

Meenakshi
Aug 13, 2024,06:30 PM IST

சென்னை: சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் சென்னை போன்ற பெரு நகரங்களில் பணி புரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கிளம்புவார்கள். விடுமுறை முடிந்தது மீண்டும் ஊருக்கு திரும்புவதும் வழக்கமாக இந்து வருகிறது. இந்த காலங்களில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்களை தவிர்க்க போக்குவரத்து கழகமும், தெற்கு ரயில்வேயும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கூட்ட நெரிசல்களை தவிர்த்து வருகின்றனர்.




இந்த ஆண்டிற்கான சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எடுத்தால் அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்து விடும் என்பதால் பலரும் சொந்த  ஊர் சென்று வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குத் திரும்புவோர் கூட்டம் நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.


அதன்படி இன்று  மற்றும் 18ம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்தும், நாளை 14ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் செங்கல்பட்டிலிருந்தும் சுதந்திர தின சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.


செங்கல்பட்டில் மாலை 5. 55 மணிக்கு புறப்படும் ரயில் பண்ருட்டிக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேர்வதோடு, திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5:50 மணிக்கு வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.40 மணிக்கு பண்ருட்டியையும், காலை 11 மணிக்கு செங்கல்பட்டையும் சென்றடையும். சுதந்திர தின சிறப்பு ரயில்களில் 6 முன்பதிவில்லா பெட்டிகள், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 1 இரண்டாம் வகுப்பு ஏசி, 2 பெண்கள், மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்