எல்லாத்தையும் ஓரம் கட்டு.. விராட் "King" கோலி.. படைக்க + உடைக்கப் போகும் 7 records!
அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் ஃபைனலில் விராட் கோலி ஏழு சாதனைகளைப் படைக்க அல்லது சமன் செய்யக் காத்திருக்கிறார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. இதுவரை இந்தியா பங்கேற்ற பத்து போட்டிகளில் விராட் கோலி மொத்தமாக 711 ரன்கள் எடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேனுக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு தங்க பந்து பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த தங்க பேட்டினை விராட் கோலியும், தங்க பந்தினை முகமது ஷமியும் வெல்லப்போவது ஏற்கனவே உறுதி ஆகிவிட்டது. இருந்தாலும் இன்று விராட் கோலி நிகழ்த்த போகும் ஏழு சாதனைகளை காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதனால் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதை தாண்டி விராட் செய்யப் போகும் அந்த மாஜிக்கைக் காணத்தான் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.
சரி அது என்ன அந்த 7 சாதனை.. இதாங்க அது!
1. இதுவரை உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 1741 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1743 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை முறியடிக்க ஜஸ்ட் 3 ரன்கள்தான் கோலிக்குத் தேவை. அதை இன்று முறியடிப்பார்.
2. நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மூன்று சதங்களை அடித்துள்ளார். அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் குவின்டன் டி காக் முதலிடத்தில் 4 சதங்களுடன் இருக்கிறார். இன்று கோலி சதம் போட்டால், காக்கின் சாதனையை சமன் செய்வார். அதேசமயம், காக்கை விட கோலி அதிக ரன்களை வைத்துள்ளதால் முதலிடத்தில் வைக்கப்படுவார்.
3. விராட் கோலி இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 711 ரன்கள் எடுத்துள்ளார். இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அடிக்காவிட்டாலும் வெறும் 89 ரன்கள் மட்டும் எடுத்தால் கூட ஒரே உலகக்கோப்பை தொடரில் 800க்கும் அதிகமான ரன்களை பெற்ற வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.
4. இன்று விராட் கோலி சதம் அடித்தால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
5. விராட் கோலி இன்று சதம் அடிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்வார். இதுவரை 5 உலகக் கோப்பை சதங்களை வைத்துள்ளார் விராட் கோலி.
6. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை தற்போது கௌதம் கம்பீர் வசம் உள்ளது. அதை இன்று சதம் அடித்தாலோ அல்லது 98 ரன்கள் எடுத்தாலோ விராட் கோலி முறியடிக்கலாம். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்கள் அடித்து உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக கம்பீர் இருந்து வருகிறார்.
7. இன்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில், 2 உலகக்கோப்பை தொடர்களை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்கள் என்ற பெருமை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், விராட் கோலிக்கும் கிடைக்கும்.
இதையெல்லாம் தவிர்த்து விராட் கோலி புதிதாக ஏதாவது சாதனை படைக்கவும் வாய்ப்புண்டு.. பார்க்கலாம்.