தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.. இதுவரை 3,27,940 மாணவர்கள் அட்மிட்..!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 2.90 லட்சம் மணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இதையடுத்து பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் எதிரொலியாக தற்போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்போர் பெரும்பாலும் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இங்கு தரமான கல்வியோடு, மாணவர்களின் அத்தனை தேவைகளும் இலவசமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதை விட முக்கியமாக முன்பு போல இல்லாமல், பாட போதனைகளும் கூட நவீனமாகியுள்ளன. சிறப்பான ஆங்கில பயிற்சி வகுப்புகள், பல்வேறு திறன் மேம்பாட்டு வகுப்புகள், அதிநவீன வகுப்பறைகள், சிறந்த ஆசிரியர்கள் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாறி அசத்திக் கொண்டுள்ளன அரசுப் பள்ளிகள். இதன் காரணமாக பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் அசத்துகின்றனர். சாதனை படைக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே சுமார் 3,27,940 பேர் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 4 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.