தனிநபரின் இமெயில், சமூக வலைதள கணக்குகளை அனுமதியின்றி அணுகலாம்.. வருமானத்துறைக்கு புது அதிகாரம்
டெல்லி: ஒரு தனி நபர், தனது வருமானம் அல்லது சொத்துக்கள் பற்றிய முழு தகவலை வெளியிடவில்லை என அதிகாரிகள் சந்தேகித்தால், அந்த நபரின் ஈமெயில், சமூகவலைதள கணக்குகளை, சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி அணுகி ஆராயலாம் என வருமானவரித்துறைக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்திருந்தார். அப்போது புதிய வருமான வரி சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய சட்ட மசோதா தற்போது அறிமுகமாகியுள்ளது. அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது உள்ள வருமான வரி சட்டம், 60 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இது சிக்கலாகியுள்ளது. இதையடுத்தே புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒருவரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய முழு தகவலை பெற அவர்களின் அனுமதி உடன் மட்டுமே அவர்களின் இமெயில், லேப்டாப், கம்ப்யூட்டர், சமூக வலைதளக் கணக்குகளை அணுக முடியும் என்று பழைய சட்டத்தில் உள்ளது. அதற்கு மாறாக சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி அவர்களின் அவர்களின் சமூக கணக்குகளை அணுக புதிய சட்டம் வகை செய்கிறது.
புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவின்படி, வருமான வரி அதிகாரிகள் தனிநபரின் ஈமெயில் சமூக வலைதள கணக்குகள் அவர்களின் அனுமதி இன்றி அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.