விடாமல் வெளுக்கும் மழை.. நனைந்து நடுங்கும் தென் மாவட்டங்கள்.. பள்ளிகளுக்கு லீவு.. மாணவர்கள் ஹேப்பி!

Meenakshi
Nov 09, 2023,12:11 PM IST

சென்னை: வட கிழக்கு பருமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதனால் தமிழகத்தின் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு வட கிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.


குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் சூப்பர் மழை பெய்து வருகிறது. முதலில் தேனியை வெளுத்தெடுத்த கன மழை பின்னர் மதுரைக்கு ஷிப்ட் ஆனது. அப்படியே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல் என மாறி மாறி கன மழை கொட்டித் தீர்த்துக் கொண்டுள்ளது.




மதுரை, கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.


மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரில் உள்ள சாலைகளில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா  அறிவித்துள்ளார். இந்த விடுமுறையால் பள்ளி குழந்தைகள் படு ஜாலியாகிவிட்டனர்.


இன்றும் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.