1,10,00,000 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஆண்களே பிறக்க மாட்டார்களாம்.. Y?.. மகளிர் மட்டும் பூமி Waiting!

Su.tha Arivalagan
Aug 29, 2024,05:22 PM IST

டெல்லி:   எதிர்காலத்தில் ஆண் இனமே பிறக்காமல் போகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சித் தகவலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது இன்னொரு புதிய பிரச்சினையையும் ஆண்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளனராம்.


கருவில் உருவாவது ஆணா இல்லை பெண்ணா என்பதை நிர்ணயிப்பது குரோம்சோம்கள்தான். அதைப் பொறுத்துதான் குழந்தையின் பாலினம் முடிவாகிறது. ஆணிடமிருந்து 23 ஜோடி குரோமோசோம்களும், பெண்ணிடமிருந்து 23 ஜோடி குரோமோசோம்களும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.  மனிதர்களுக்கு இரண்டு வகையான குரோமோசோம்கள் உள்ளன. ஒன்று X, இன்னொன்று Y. பெண்களிடம் எக்ஸ் வகை குரோமோசோம்கள் மட்டுமே உள்ளன. ஆண்களிடம் எக்ஸ், ஒய் என இரண்டுமே உள்ளன. 




அதாவது  பெண்களிடம் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களும் எக்ஸ் குரோமோசோம்கள்தான். ஆண்களிடம் உள்ளதில், 23வது ஜோடி குரோமோசோம் இருக்கில்லையா.. அது எக்ஸ், ஒய் என கலந்து இருக்கும். கரு உருவாகும்போது எக்ஸ் குரோம்சோம்கள் மட்டும் இணைந்து உருவானால் அது பெண் குழந்தையாக பிறக்கும். எக்ஸ், ஒய் என இரண்டும் கலந்து இணைந்து கரு உருவானால் அது ஆண் குழந்தையாக மாறும். பெண்களின் குரோமோசோம்களில் 900 வகை ஜீன்கள் உள்ளன. அதேபோல ஆண்களின் குரோமோசோம்களில் உள்ள 55 வகையான ஜீன்களின் குழந்தையின் பல்வேறு வகையான குண நலன்களை நிர்ணயிக்கிறது. கரு உருவாகி 12 வாரங்களுக்குப் பிறகு இதன் வேலை ஆரம்பிக்கும். இது மரபியல். இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.


ஆண்களின் குரோம்சோம் வரிசையில் ஒய் குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதாக மரபியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படியே போனால் இன்னும் சில மில்லியன் வருடங்களில் ஆண் குழந்தைகள் பிறப்பது அறவே நின்று விடுமாம். வெறும் பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை பாலின ஜீன் உருவானால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


இதுதொடர்பாக எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த எலிகளின் ஜீன்களில் ஒய் குரோமோசோம்கள் முற்றிலும் அழிந்து விட்டன. அவற்றை வைத்துத்தான் மனிதனின் எதிர்காலம் குறித்த ஆய்வை தற்போது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம், இந்த எலிகளில் புதிய வகை ஜீன் உருவாகியுள்ளதாம். இந்த ஜீன் ஆண் பாலினத்தை நிர்ணயிப்பதாகவும் ஒரு மகிழ்ச்சியான செய்தி நமக்குக் கிடைத்துள்ளது. இதேபோல மனித ஆண்களின் ஜீன்களும் புதிய வகை குரோமோசோமை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளதாம்.


மனிதர்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவர்கள். நம்மைப் போலவே உள்ள பிற பாலூட்டி வகை விலங்குகளிலும் கூட இதேபோல தான் குரோமோசோம்கள் இருக்கும் . சிற்சில மாற்றங்கள்தான் இருக்கும். இதில் மனித இனத்தில்தான் தற்போது ஒய் குரோமோசோம்கள் குறைவு பிரச்சினை அதிகரித்து வருகிறதாம். மில்லியன் ஆண்டுகளுக்கு 5 ஜீன்கள் என்ற ரீதியில் இந்த அழிவு நடந்து வருகிறதாம். இப்பிடயே போனால், இன்னும் 11 மில்லியன் ஆண்டுகளில் மனித ஆண் இனத்தில் மிச்சம் உள்ள 55 ஜீன்களும் முற்றிலும் அழிந்து போய் விடுமாம்.




ஆண் இனத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோம்கள் முற்றிலும் அழிந்து விட்டால் பெண்கள் மட்டுமே பிறப்பார்கள் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது 2 வகை எலிகளிடம் நடத்தப்பட்டு வரும் ஆய்வில் நமக்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள் கிடைத்து வருகின்றனவாம். இந்த எலிகளில் ஒய் குரோமோசோம்கள் அழிந்து விட்டன. அதற்குப் பதில் புதிய வகை குரோமோசோம்கள் உருவாகியுள்ளனவாம்.  ஒய் குரோமோசோம்கள் இல்லாமலேயே இந்த எலி இனங்களில் ஆண், பெண் இனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றனவாம். இதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.


ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வுகள் வேகம் பிடித்துள்ளன. இந்த வகை எலிகள் ஜப்பான் தீவுகளில் உள்ளனவாம். இந்த எலிகளில் ஒய் வகை குரோமோசோம்களின் பணியை வேறு ஒரு குரோமோசோம் செய்வதாக தெரிய வந்துள்ளது. அது எது என்பதுதான் தற்போது நடந்து வரும் ஆய்வாகும். இந்த ஆய்வுகளில் நமக்கும் ஏதாவது நல்ல சேதி கிடைக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.


சரி அதை விடுங்க.. 11 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு இருக்கப் போகும் பூமியை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்களேன்.. ஆண்களே இருக்க மாட்டார்கள்.. பல ஆண் விலங்குகளும் கூட இருக்காது.. முற்றிலும் பெண்கள் மட்டும் நிறைந்த, ஆண்களே இல்லாத அந்த உலகம் எப்படி இருக்கும்.. உங்களோட கற்பனையை கமென்ட்ல தட்டி விடுங்க பார்ப்போம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்