தேர்தல் சமயத்தில் இப்படியா நடக்கணும்?.. இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டு சிறை!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷாரா பீபீக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தொஷாகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜனவரி 09ம் தேதி 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2018 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரையிலான அவரது ஆட்சி காலத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி 140 மில்லியன் பாகிஸ்தான் கரன்சி மதிப்பிலான பரிசுப் பொருட்களை விற்று, வாங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் இம்ரான் கான் 10 ஆண்டுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில் அவரது மனைவி புஷாரா பீபீக்கு இந்த ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனது மனைவி அப்பாவி என்றும், அவரை இந்த வழக்கில் சேர்த்து, தண்டனை வழங்கி உள்ளது மனிதத்தன்மை அற்ற செயல் என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டி உள்ளார். இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் தலா 1.57 பில்லியல் பாகிஸ்தான் கரன்சி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து இம்ரான் கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மகமூத் குரேஷிக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வருவது அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.