இன்றும் நாளையும்.. கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு.. ஆரஞ்சு அலர்ட்.. 7ம் தேதி மழைக்கு சான்ஸ்!

Manjula Devi
May 03, 2024,06:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீச கூடும் எனவும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மே 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மேலும் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கடும் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். 




5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அளவு உயரும் என்பதால் இப்பகுதிகளில் கடும் வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இன்று முதல் மே 6 வரை வெப்பத்தின் அளவு 4 டிகிரி செல்சியஸ் வரை உயரம் எனவும், இதனால் இப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மழை நிலவரம்:


தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேபோல் மே 7ஆம் தேதி வட தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் கடுமையான வெயில் தாக்கம் நிலவுவதால் மக்கள் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். இதனால்  செயற்கை ரசாயனம் கலந்த குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். இதனால் மக்களுக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாறாக பழச்சாறுகள், பழங்கள், கூழ், மோர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.