IMD Alert.. 17 மற்றும் 18ம் தேதிகளில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு.. இந்த மாவட்டங்களில்!

Su.tha Arivalagan
Dec 15, 2024,08:31 PM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல  கீழ் அடுக்கு சுழற்சியானது அடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகவுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.


இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:


தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.




15.12.2024 மற்றும் 16.12. 2024 


தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


17ம் தேதி


கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னை - 18ம் தேதி  கன மழை


தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


19ஆம் தேதி 


திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 


20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்